வகுப்பறையில் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான கலந்துரையாடல்... மனிதர்கள் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்துகின்றனர். சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குத் தொழிற்சாலைகள் முதன்மை காரணி எனப் பேச்சு நகர்ந்தது.
“சார்! சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் விதமாகத் தொழிற்சாலை ஆபத்துகளைக் கட்டுப்படுத்தி, வழிநடத்தும் நடவடிக்கை ஏதாவது உள்ளதா?" என ஒரு மாணவன் கேட்டான். ‘சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம்’ (Environmental, Social, and Governance (ESG) - இஎஸ்ஜி) உள்ளதை நினைவுபடுத்தினேன்.
இயற்கையைப் பாதுகாக்கவும், சமூக முன்னேற் றத்தை உறுதிப்படுத்தவும், உலகளாவிய நிர்வாகத் தரத்தை மேம்படுத்தவும் நாம் செயல்படக்கூடிய முக்கிய வழிகளை இந்த மூன்று துறைகளும் கூறுகின்றன.
1. சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்தைச் சமாளித்தல், கழிவுகளைக் குறைத்தல் போன்றவை. 2. சமூக முன்னேற்றம் - கல்வி, சுகாதாரம், பாலினச் சமத்துவம் போன்றவை. 3. வலுவான நிர்வாகம் - நீதி, வலுவான நிறுவனங்களை உருவாக்குதல். இப்படி யான பல்வேறு வகையான இஎஸ்ஜி காரணிகளை உள்ளடக்கியதுதான் நிலைத்த வளர்ச்சியின் இலக்குகள்.
பாதகம் இல்லா வளர்ச்சி? - பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா உள்ளது. 2027க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், இந்த வளர்ச்சி சுற்றுச்சூழலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2022இல் உலகளவில் 7% கார்பன் உமிழ்வை இந்தியா வெளியிட்டுள்ளது.
கார்பன் உமிழ்வு அதிகரிப்பது, சுற்றுச்சூழல் சீரழிவைத் தூண்டும். இதனால், இஎஸ்ஜி நடைமுறைகள் அவசியமாகின்றன. ஆனால், இந்திய நிறுவனங்களின் இஎஸ்ஜி செயல்பாடுகள், சரியான கண்காணிப்பு, மதிப்பீடு, செயல்படுத்தல் இல்லாமல் இருக்கின்றன. இஎஸ்ஜி பெரும் பாலும் கண்காணிப்பு பட்டிய லாகவே பார்க்கப்படுகிறது; உண்மையான மாற்றத்தை நோக்கி நகரவில்லை.
தெலங்கானாவில் கடந்த ஜூன் மாதம் ஒரு வேதித் தொழிற்சாலையில் உலை வெடித்துச் சிதறியதால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்கு முன்பும் பின்பும் இதைவிடக் கொடிய தொழிற்சாலை விபத்துகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. சுற்றுச்சூழல், சமூகப் பாதுகாப்புக் குறைவாக இருப்பதையே இத்தகைய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.
2022-23 முதல் இந்தியாவின் முன்னணி 1,000 எனப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு வணிக பொறுப்பு, நிலைத்த வளர்ச்சி சார்ந்த அறிக்கை (Business Responsibility and Sustainability Reporting) கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ஒரு சப்பைக்கட்டு நடவடிக்கையாகவே இருக்கிறது; சரியான மாற்றத்தை நோக்கி நகரவில்லை.
இவ்வளவு விவரங்கள் மாணவர்களுக்கு அவசியமா என்கிற கேள்வி, கலந்துரையாடலுக்கு இடையில் எழுந்தது. இன்றைய மாணவர்கள்தானே நாளைய இந்தியா. சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் அனைத்துடன் தொடர்புடையதுதானே நாளைய இந்தியா என்றதும், விவாதம் மீண்டும் சூடுபிடித்தது.
பூஜ்ய உமிழ்வு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன், நல்ல நிர்வாகத்தை இசிஜி செயல்பாடுகள் முன்னிலைப் படுத்த வேண்டும். வெறும் பட்டியலை நிரப்பும் பணியாக இருக்கக் கூடாது. நிறுவனங்கள், இஎஸ்ஜி இலக்குகளை நிலைநிறுத்தி, அவற்றை அடைவதற்கான இடைக்கால இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். 2070இல் ‘நெட்-ஜீரோ’ (பூஜ்ய உமிழ்வு) எனும் அரசு அறிவிப்பு மட்டும் போதாது.
இஎஸ்ஜி நடைமுறைகள் நிறுவனங்களுக்குத் தீங்கு செய்யாது; மாறாக, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். இது நல்ல வணிக நெறிமுறைகளையும் உருவாக்கும்.
ஆகையால், சூழலியல் சார்ந்த பிரச்சினை களுக்குத் தீர்வுகாணச் சிக்கலை முழுமையான பரிமாணத்தில் முதலில் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதையடுத்து சிக்கலான பிரச்சினை களுக்குத் தீர்வு காணும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரமுடியும்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், தலைமையாசிரியர்; saran.hm@gmail.com