வெற்றிக் கொடி

மேலாண்மைக் குழு சிறக்க விருப்பமும் ஈடுபாடும் அவசியம்

Guest Author

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உறுதிசெய்தல், பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இடைநிற்றலைத் தவிர்த்தல் போன்ற பணிகளை அரசு மட்டுமே தனியாக, முழுமையாக நிறைவேற்றிவிட முடியாது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியம். இவ்வாறு அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட பள்ளி மேலாண்மைக் குழு பெரிதும் உதவுகிறது.

நம் பள்ளி, நம் பெருமை!

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அரசுப் பள்ளிகள் குறித்து, ‘நம் பள்ளி, நம் பெருமை’ என மக்கள் உணர்ந்து செயல்படுவதே இதன் நோக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான மறுகட்டமைப்பு அரசுப் பள்ளிகளில் நடைபெறுகிறது.

தற்போது 2026-28 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு பணி முன்னெடுக்கப் பட்டுள்ளது. முதலில் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான மறுக்கட்டமைப்பு பணிகள் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்றன.

இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 முதல் 8ஆம் வகுப்புவரை கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்குவதைக் கல்வி உரிமைச் சட்டம் உறுதி செய்கிறது.

இதன்படி பள்ளிகளின் ஒட்டுமொத்த மேம்பாடு, வளர்ச்சியில் சமூகப் பங்கேற்பை உறுதிசெய்யும் முக்கிய அமைப்பாக, பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்தக் குழுவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பிரதிநிதி, கல்வியாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.

பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோர், பிற பங்களிப்பாளர்களின் பங்களிப்பை வலுப்படுத்தி, பள்ளிக்கும் சமுதாயத்துக்குமான உறவைப் பலப்படுத்தும் பொறுப்பு பள்ளி மேலாண்மைக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் செயலி

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின், ‘TNSED Parents’ பெற்றோர் செயலி வாயிலாகப் பள்ளி தலைமையாசிரியர் அல்லது பள்ளி மேலாண்மைக் குழு தலைவரால் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பதிவேற்றம் செய்யப்படும் பள்ளிகளின் தேவைகளை மாநில அளவில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், இதர உயர் அலுவலர்கள் அறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்களுக்குச் சம பங்கு

உள்ளாட்சி பிரதிநிதிகள் இருவர், கல்வியாளர் ஒருவர், சுயஉதவிக் குழு உறுப்பினர், பெற்றோர்கள், முன்னாள் மாணவ உறுப்பினர்கள், பெற்றோர்களில் மூவர் முன்னாள் மாணவர்கள், பொதுப் பிரிவில் ஒருவர் என மொத்தம் 24 பேர் கொண்ட குழு இது. மொத்த உறுப்பினர்களில் 75 சதவீதம் பெற்றோர்களாக இருக்க வேண்டும் என்பது இதன் தனிச்சிறப்பு.

ஆகவே 18 உறுப்பினர்கள் பெற்றோர்களாக இருத்தல் அவசியம். மேலும் மொத்த உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 12 பெண்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்குச் சம பங்கு அளிப்பதில் இந்தக் குழு முனைப்புக் காட்டுகிறது. இத்தகு விகிதாச்சாரத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்புப் பணி உரிய வழிகாட்டுதல், நெறிமுறைகளைப் பின்பற்றி மாநிலம் முழுவதும் நடைபெற்று முடிந்திருக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பள்ளியின் வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்படப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மேலாண்மைக் குழு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

அதற்குப் பள்ளி அமைந்துள்ள கிராமங்களில் பெற்றோர்கள், உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பள்ளியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது அவசியம். அதை விடவும் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பாக நடைபெற உறுப்பினர்களிடையே உள்ளார்ந்த விருப்பமும் ஈடுபாடும் போதிய நேரம் ஒதுக்குவதும் மிகவும் அவசியம்.

- மா. பழனி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னபள்ளத்தூர், பென்னாகரம் ஒன்றியம், தருமபுரி; தொடர்புக்கு: palanikm1973@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT