வெற்றிக் கொடி

உடனடி மன நிறைவின் ஆபத்து

Guest Author

மதுரையைச் சேர்ந்த ராகவ் (12), காலை 7 மணிக்கு எழுந்ததும் தொலை பேசியைத் தேடினான். "அம்மா, எனக்கு இப்போதே கேம் விளையாடனும்!" என்று அடம்பிடித்து அழுதான். குளிப்பதற்கு முன், காலை உணவுக்கு முன், பள்ளிக்குத் தயாராவதற்கு முன் - அவனுக்கு உடனடியாக அந்த மன நிறைவுத் தேவைப்பட்டது.

பெற்றோர், அவனை அனுமதித்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, ராகவால் பள்ளியில் 40% மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை, நண்பர்கள் இல்லை, சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட எரிச்சலுடன் எதிர்வினையாற்றினான். இது ஒரு மாணவரின் கதை மட்டுமல்ல.

          

காத்திருப்பதில்லை

நகர்ப்புற இந்தியக் குழந்தைகளில் 73% பேர் அன்றாடம் 3 மணிநேரம்வரை திரை நேரத்தில் கழிக்கின்றனர், குழந்தைகளை ‘சமாதானப்படுத்த’ 58% பெற்றோர் உடனடியாக அவர்களது கோரிக்கைகளைப் பூர்த்தி செய்கின்றனர், 65% குழந்தைகள் எளிய சிரமங்களுக்கு விரக்தி யடைகின்றனர் என்று இந்தியக் குழந்தை உளவியல் சங்கம் 2023இல் ஆய்வு முடிவு வெளியிட்டது.

குழந்தைகளின் டிஜிட்டல் (எண்ணிலக்கக் கருவிகள்) பயன் பாட்டுக்கும் விரக்திக்கும் இடையில் எவ்வாறு தொடர்பு ஏற்படுகிறது தெரியுமா? இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள்:

* ஒரு சொடுக்கில் எந்த காணொளியையும் பார்க்கலாம்.

* அடுத்த நொடியில் இணையவழியில் எந்த விளையாட்டையும் விளையாட லாம்.

* உடனடியாக எந்த உணவையும் வாங்கிச் சுவைக்கலாம்.

* சமூக ஊடகங்களில் உடனடி லைக்குகளையும் கவனத்தையும் ஈட்டலாம்.

இதனால் எதற்கும் காத்திருக் காமல், உடனுக்குடன் வெகுமதியோ, மகிழ்ச்சியோ அடைய வேண்டும் என்கிற உடனடி மன நிறைவு (Instant Gratification) தேடும் நிலைக்குச் சிறார் தள்ளப்படுகிறார்கள். இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால் உடனடியாக விரக்தி அடைகிறார்கள்.

நடைமுறை தீர்வுகள்

திரை நேரம், டிஜிட்டல் அடிமைத்தனப் பழக்கங்களை திடீரெனக் கைவிடும்படி அழுத்தம் கொடுப்பது தீர்வுத் தராது. இலக்கு வகுத்து கீழ்க்காணும் வழிகளில் படிப்படியாகக் குறைக்க வேண்டும்.

* 5 நிமிட விதி: குழந்தை ஏதாவது கேட்கும்போது, “5 நிமிடங்களில் பார்ப்போம்” என்று முதலில் தள்ளிப்போடுங்கள். பிறகு படிப் படியாக 10, 15, 30 நிமிடங்களாக அதிகரிக்கவும். இவ்வாறு தாமதிக்கப்பட்ட திருப்திக்குப் பயிற்சி அளியுங்கள்.

* குடும்ப ஒப்பந்தம்: பெற்றோர், குழந்தைகள் இரு தரப்பும் ‘செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை’ என பட்டியலிட்டுக் கையெழுத்திட்டு, அவற்றைப் பின்பற்றுங்கள்.

* காத்திருப்புப் பயிற்சி: ஒரு செடியை நட்டு, அன்றாடம் அதற்கு நீரூற்றி, பராமரிக்கக் கற்றுக் கொடுங்கள்.

* வயதுக்குப் பொருத்தமான வீட்டு வேலைகளைக் கொடுங்கள்.

* உடனடி வெகுமதி, ஊக்கத் தொகைகள் கொடுப்பதைக் கை விடுங்கள்.

* குடும்ப நேரத்தின்போது டிஜிட்டல் பயன்பாட்டை, தொலைபேசியைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

* சுய-கட்டுப்பாடுப் பயிற்சி: தூண்டு தலை உணர்ந்தால் 3 முறை ஆழமாக மூச்சை இழுத்து விடவேண்டும், மீறிச் செய்தால் அதன் விளைவுகளை அசைபோட வேண்டும்.

அன்பு என்பது உங்கள் குழந்தை விரும்பும் எல்லாவற்றையும் கொடுப்ப தல்ல, அவர்களுக்குத் தேவையானதை மட்டும் கொடுப்பது.

கேட்டதும் கொடுத்தால்?

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் உத்தி பெற்றோர் வசம்தான் உள்ளது. முதலில், உங்கள் வீட்டில் உடனடி மன நிறைவு முறைகளை அடையாளம் காணுங்கள்:

* உங்கள் குழந்தை கேட்டவுடன் நொறுக்குத் தீனி அளிக்கிறீர்களா?

* பொறுமையின்மையைத் தவிர்க்க மின்னணுக் கருவிகளை அளிக்கிறீர்கள்?

* உங்கள் குழந்தை கேட்காமலேயே விஷயங்களைச் செய்கிறீர்களா?

* உங்கள் குழந்தை வாரத்தில் 20+ மணி நேரத் திரை நேரத்தைக் கொண்டுள்ளாரா?

* உங்கள் குழந்தையால் 30 நிமிடங்கள் எதற்காவது காத்திருக்க முடியுமா?

* எளிய சிரமங்களில் உங்கள் குழந்தை கோபமடைகிறாரா அல்லது மனம் உடைந்து போகிறாரா?

3+ ஆம் என்றால்: மிதமான பிரச்சினை.

5+ ஆம் என்றால்: தீவிர பிரச்சினை.

மேற்கூறிய தவறுகளைப் பெற்றோர் இழைக்க முக்கியக் காரணிகள், உடனடி மோதலைத் தவிர்க்கும் முயற்சி, சமூக அழுத்தம், தனக்கு இளம் வயதில் கிடைக்காதது தனது குழந்தைக்காவது கிடைக்கட்டுமே என்கிற மனக்குறையின் வெளிப்பாடு, எதிர்கால விளைவுகள் பற்றிய அறியாமை.

- கட்டுரையாளர்: ச. ஆலன் ஜோசப், மனநல ஆலோசகர்; alanjoseph.joseph96@gmail.com

SCROLL FOR NEXT