இன்றையச் சூழலில் சிறார் பல விஷயங்களில் மகிழ்ச்சி யாக இருக்கிறார்கள். ஒன்றில் மட்டும் மிகவும் மனம் உடைந்து போய்விடுகிறார்கள். படிப்பதுதான் அது.
வேறு புத்தகங்களை வாசிப்பதைப் பற்றி இங்கே பேசவில்லை. பாடப்புத்தகங்களைப் பற்றியே யோசிப்போம். பெரும்பாலான மாணவர்கள் நன்றாகப் படிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.
எட்டாம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்னும் முறை தோல்வியைத் தாங்க முடியாத வருத்தம் குழந்தைகளுக்கு வந்துவிடுமே என்பதற்காகக் கொண்டுவந்தது.
அது மட்டுமல்ல இடைநிலை வகுப்புகளில் தோல்வி கண்டால் இடைநிற்றல் ஏற்பட்டு குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்னும் நல்லெண்ணமும் அந்தத் திட்டத்தில் உண்டு. அதற்காக ஒன்பதாம் வகுப்புக்கு வந்தபிறகும் எழுத்துகளை அறிய முடியவில்லை, வேகமாகப் படிக்கமுடியவில்லை என்றால் என்ன செய்வது?
தமிழ்ப் பழகு
ஆகவேதான் குழந்தைகளே இந்தக் கோடை விடுமுறையில் மீதம் இருக்கும் நாள்களில், ஒரு நாளின் ஒரு சில மணி நேரத்தைப் பழைய பாடப்புத்தகங்களைப் படிக்கச் செலவிடுங்கள். குறிப்பாகத் தமிழ்ப் பாடங்களை வாசிக்க வேண்டும். மொழிதான் அறிவுக்கு அடிப்படை.
தமிழை ஒருவர் மிகச்சரியாக எழுதப் படிக்க கற்றுக் கொண்டால், அவரால் எல்லா பாடங்களையும் சரளமாகப் படிக்க முடியும். அந்தக் காலத்தில் எட்டாவது படித்தால் ஆசிரியர் ஆகலாம். இன்று எட்டாவது படித்த குழந்தைகளில் பலரால் பத்து வரிகூட எழுத முடியவில்லை, வேகமாக வாசிக்க முடியவில்லை.
முதலில் எழுத்துகளைப் படிக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு புத்தகத்தை உங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் வாங்கி உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை சத்தம்போட்டுப் படிக்க வேண்டும்.
அப்படிப் படிக்கும்போது கண், வாய், செவி ஆகிய மூன்று புலன்கள் செயலாற்றுகின்றன. அவற்றை எழுதிப் பார்க்க வேண்டும். பழைய நோட்டுகளில் இருக்கும் மீதமான பக்கங்களை இதற்குப் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு மணிநேரம் போதும். ஏற்கெனவே படித்தவைதானே.
கூடிப் படி
அதற்கடுத்து ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களைப் படிக்க வேண்டும். அடுத்து ஈரெழுத்து சொற்கள், மூவெழுத்துச் சொற்கள் என அதிகரித்து எல்லா சொற்களையும் வாசிக்க வேண்டும். சத்தமாக வாசிப்பதால் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை அறிந்து, உங்கள் பெற்றோர் மகிழ்வர். நண்பர்களும் கூடிவருவார்கள்.
மாலை நேரத்தில் படித்தவற்றை எழுதிப் பார்க்கலாம். நண்பர் களைச் சொற்களைச் சொல்ல வைத்து, நீங்கள் எழுதலாம். நீங்கள் சொல்ல அவர்கள் எழுதலாம். ஒரு விளையாட்டாகவே இது மாறும். பிறகு சிறு வாக்கியங்களை வாசித்தல். அவற்றின் பொருளை அறிதல்.
மெதுவாக எழுத்துக்கூட்டி வாசித்தல். கொஞ்சம் வேகத்தை அதிகரித்தல் எனப் படித்தல் உங்களுக்கு வசமாகிவிடும். மூன்று நாள்களுக்குள்ளேயே இது நிகழும். பிறகு ஒரு பத்தி, ஒரு பக்கம், ஒரு பாடத்தைப் படித்தல் என்று அது அதிகரிக்கும்.
உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு பெருமிதம் வரும். என்னாலும் படிக்க முடியும் என்னும் தன்னம்பிக்கை உயிர்பெறும். இன்னும் கொஞ்சம் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கப் படிக்க உங்களுக்கு வாசிப்பு வந்துவிடும். இப்போது கடந்த ஆண்டு நீங்கள் படித்த வகுப்புப் புத்தகத்தை எடுத்து வாசித்துப் பாருங்கள். ‘அடடே! இத அப்பவே படிக்காம போயிட்டமே’ என்று மனம் சொல்லும்.
தலைநிமிர்
இப்போது உங்கள் வீட்டில் இருக்கும் நாளிதழ், பொட்டலம் கட்டித்தரப்படும் தாள்கள், விளம்பர நோட்டீஸ்கள் என அனைத்தையும் வாசிக்க வேண்டும். உங்கள் தந்தை, தாயுடன் வெளியில் செல்லும்போது கடைகளில் வைத்திருக்கும் பெயர்ப்பலகைகள், விளம்பரங்கள் ஆகிய வற்றைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
இதற்கெல்லாம் இரண்டு வாரக் காலமே போதும். இப்போது வேகமாக வாசிக்கும் பழக்கமும் தைரியமும் வந்துவிடும். இனி, உங்கள் அறிவியல் புத்தகம், சமூக அறிவியல் புத்தகம் ஆகியவற்றை எடுத்து சத்தமாக வாசிக்க வாசிக்க உங்கள் அறிவின் எல்லை விரிய ஆரம்பிக்கும். நம்பிக்கைப் பூக்கள் மலரும்.
மெதுவாக எண்களைப் படித்தல் எளிய கணக்குகளைப் போடுதல், அதை ஒரு விளையாட்டாகவே செய்தல் என மாற்றுங்கள். பாருங்கள், உங்கள் கண்கள் பிரகாசிக்கும். அடுத்துத் தமிழைப் போலவே ஆங்கி லத்தையும் படியுங்கள்.
படிக்கத் தெரியாதவர் என்னும் இழிவு உங்களை விட்டு நீங்கிவிடும். நீங்கள் நன்றாகப் படிப்பதை வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்டு லைக்கும் வாங்கலாம். அடுத்த கல்வியாண்டில் முதல் மாணவராகத் தலை நிமிர்ந்து செல்வீர்கள்.
- கட்டுரையாளர்: யாழன் ஆதி, எழுத்தாளர் - ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, நாச்சார்குப்பம், திருப்பத்தூர்; yazhanaathi@gmail.com