செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி
சென்னைக்கு 387 வயதானாலும் இன்ற ளவும் இளமை மாறாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அதன் கல்வி நிலையங்கள்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள், கடற்கரை எனப் பல அடையாளங்களைக் கொண்ட சென்னைக்கு, 'கல்வி நகரம்' என்கிற தனித் துவத்தை அளிப்பவை இரண்டு, மூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் பழம்பெரும் பள்ளிக்கூடங்கள்.
ஆசியாவின் முதல் ஆங்கிலவழிப் பள்ளி தொடங்கி சென்னைக்குப் பெருமை சேர்க்கும் பழமையான சில பள்ளிகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போம்.
முதல் ஆங்கிலப் பள்ளி
போரில் மடிந்த பிரிட்டிஷ் படை வீரர்களின் ஆதரவற்ற குழந்தைகளுக்காகக் கிழக்கிந்திய கம்பெனியால் சென்னையில் செயின்ட் மேரிஸ் சாரிட்டி பள்ளி 1715இல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பொதுப் பள்ளியும் ஆசியாவின் முதல் ஆங்கிலவழிப் பள்ளியும் இதுவே.
1904இல் ஷெனாய் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, ‘செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி, ஆதரவற்றோர் இல்லம்’ எனும் பெயர் சூட்டப்பட்டது.
இந்தோ-சாரசெனிக் பாணியில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட உயரமான மேற்கூரைகள், நீண்ட வராண்டாக்கள், நூற்றாண்டைக் கடந்த அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பரந்த வளாகம் ஆகியவை இதன் தனிச்சிறப்பு.
தொடக்கத்தில் ஐரோப்பியக் குழந்தை களுக்கு மட்டுமே என்றிருந்த நிலை மாறி, ஆங்கிலோ-இந்தியப் பள்ளியாகப் பின்னர் உருவெடுத்தது. ஆங்கில மொழித் திறனுக்கும் ஹாக்கி, கால்பந்து, தடகளம் முதலான விளையாட்டுகளுக்கும் இங்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இங்குள்ள பழமையான நூலகத்தில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல அரிய நூல்கள் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. 1,400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்குக் கல்வி புகட்டிவரும் அதேவேளையில் ஆதார நோக்கத்தில் இருந்து தடம்புரளாமல் இன்றளவும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்துவருகிறது.
பள்ளியின் முதன்மை வகுப்பறை வளாகமும் தேவாலயமும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணை யத்தால் அங்கீகரிக்கப்பட்ட 400 மரபுக் கட்டிடங்களின் பட்டியலில் இடம்பிடித் துள்ளன.
தற்சார்பு போதிக்கும் களம்
ஆங்கிலேய பாதிரியார் ஜான் வெஸ்லி தொடங்கிய ‘மெத்தடிஸ்ட் திருச்சபை' முறையின் பற்றாளர் ஜேம்ஸ் லிஞ்ச். இவரால் சென்னை ராயப்பேட்டை
யில் வெஸ்லி பள்ளி 1818இல் ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்திய ஆன்மாவை உள்வாங்கிச் செயல்பட்ட இந்தப் பள்ளி, காந்தியடிகளின் கைவினைத் தொழில் வழிக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, அதன் மூலம் மாணவர்கள் தற்சார்பு அடைய வழிகாட்டியது.
பெரிய தூண்கள், அரைவட்ட வடிவ வளைவுகள், காற்றோட்டமான பெரிய வகுப்பறைகளைக் கொண்ட பழமையான கட்டிடம் என 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயர் கட்டிடக் கலைக்கு, இந்தப்பள்ளி வளாகம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக இன்றுவரை திகழ்கிறது.
ஏட்டுக்கல்வி மட்டுமன்றி, ஒழுக்கம், சமூகச் சேவையை மாணவர்களிடம் விதைப்பதில் இந்தப் பள்ளி தனித்துவம் பெற்றது. இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து, இன்று அதிநவீன வசதிகளுடன் அடித்தட்டு மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தலைவர்களை உருவாக்கிய நர்சரி
ஸ்காட்லாந்து கல்வியாளர்கள் ஜேம்ஸ் லாரி, மேத்யூ பவுஸ் இருவரின் கூட்டுமுயற்சியால் எழும்பூரில் ஒரு சிறிய பள்ளியாக சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மேல் நிலைப் பள்ளி 1835இல் தொடங்கப்பட்டது.
பின்பு மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் ஆக வளர்ந்து, கல்லூரி யும் பள்ளியும் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டு, பள்ளி சேத்துப்பட்டுக்கு மாற்றப்பட்டது. இந்தப்பள்ளியின் முதல் இந்தியத் தலைமையாசிரியர் குருவில்லா ஜேக்கப், ‘இந்தியாவின் நவீனக் கல்வி வரலாற்றின் சிகரம்’ என அழைக்கப்படு கிறார். சிறந்த கல்வியாளருக்கான உயரிய விருதான பத்ம 1971இல் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்தப் பள்ளியின் கட்டிடம், கம்பீர மான விக்டோரிய, காலனித்துவக் கட்டிடக்கலையின் கலவையாகும். இந்தியர் களுக்கு ஆங்கிலக் கல்வியை வழங்கு வதில் முன்னோடியாகத் திகழ்ந்த இந்தப் பள்ளி, கல்வியோடு சேர்த்து கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் மாணவர்களைத் தீவிரமாக ஈடுபடுத்தும் தனித்துவம் கொண்டது.
சென்னை கிறித்துவ பள்ளி
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் முதலான அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அறிவியலாளர்களை உருவாக்கிய இந்தப் பள்ளி, இன்றும் சிறப்பாக இயங்கி வருகிறது.
தலைநகரின் இதயச் சுடர்மதராஸ் மாகாணத்தின் வர்த்தக மையமான ஜார்ஜ் டவுன் பகுதியில் கத்தோலிக்கத் திருச்சபையினரால் புனித மேரி ஆங்கிலோ-இந்தியப் பள்ளி 1839இல் தொடங்கப்பட்டது.
பிராட்வே பகுதியின் நெரிசலான தெருக்களுக்கு நடுவே அமைந்திருந் தாலும், காதிக் கட்டிடக்கலை கூறு களைக் கொண்ட இந்தப் பள்ளியின் நுழை வாயிலும், உயரமான மர ஜன்னல்களும் பழமையின் கம்பீரத்தை உணர்த்துகின்றன.
தொடக்கத்தில் ஆங்கிலோ-இந்தியக் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, பின்னர் கல்விக்கான கதவுகளை அனைவருக்கும் திறந்து விட்டது. நன்னெறிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரும் இந்தப் பள்ளி, காலமாற் றத்துக்கு ஏற்ப நவீன மாநிலப் பாடத் திட்டத்துக்குத் தன்னை வெற்றிகரமாகத் தகவமைத்துக் கொண்டுள்ளது.
மேதைகளின் தொட்டில்
ஐரோப்பியக் கல்விமுறை சென்னைக் குப் புதிய முகம் கொடுத்த காலத்தில், இந்தியப் பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுக்கும் நோக்கம் மறுபுறம் தலைதூக்கியது.
தமிழ்ப் பேசும் மாணவர்களுக்காகத் திராவிட பாடசாலையும், தெலுங்கு பேசும் மாணவர்களுக்காக இந்து ஆந்திர பாலரு பாடசாலையும் உள்ளூர்த் தலைவர்களால் திருவல்லிக்கேணியில் 1852இல் ஒரே இடத்தில் உருவாக்கப்பட்டன.
பின்னாளில் இவ்விருபாடசாலைகளும் ஒன்றாக இணைக்கப் பட்டு, 1897இல் இந்து மேல்நிலைப் பள்ளியாகப் பெயர் மாற்றப்பட்டது.
பிரிட்டிஷ் இந்தியாவின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஹென்றி இர்வின், அன்றைய பிரபல கட்டுமானப் பொறியாளர் நம்பெருமாள் செட்டி ஆகிய இருவரின் கட்டிடக் கலை திறனில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்தப் பள்ளி வளாகம் கட்டி எழுப்பப்பட்டது.
இங்கு கணிதம், அறிவியலில் மிகத் தீவிரமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. ‘தி இந்து’ நாளிதழைத் தொடங்கிய எம்.வீரராகவாச்சாரியார், ஜி.சுப்பிரமணியன் ஆகிய இருவரில் முன்னவர் ஆசிரியராகவும், பின்னவர் தலைமை ஆசிரியராகவும் இந்தப் பள்ளியில் பணிபுரிந்தனர்.
நோபல் பரிசாளர் சுப்ரமணியன் சந்திரசேகர், அறிவியலாளர் யல்லபிரகடா சுப்பாராவ், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பி.ராமா ராவ் போன்ற மாமேதைகள் பயின்ற பள்ளி இது.
- susithra.m@hindutamil.co.in