அன்பும் பொறுமையும் வேண்டும்; இருந்தால் உடன் நடந்து வருபவர்களின் பலவீனங்களைப் புரிந்து கொள்ளவும் முடியும்; பொறுத்துக் கொள்ளவும் முடியும். மிக முக்கியமாகச் சேர்ந்து நடப்போர் அடிக்கடி வெளிப் படுத்தும் அசட்டுத்தனங்களை! குழந்தைகள் வெளிப்படுத்தும் அசட்டுத்தனம் சிரிப்பை வரவழைக் கிறது.
“நாளைக்கி நாங்க மாமா வீட்டுக்குப் போனோம்” என்று குழந்தை பேசும்போது யாரும் இலக்கணம் பார்ப்பதில்லை. இதையே வகுப்பறையில் மாணவன் பேசும் போது ‘எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் ஏன்’டா போட்டுக் குழப்புறே?’ என்று ஆசிரியர் கண்டிக் கிறார். அவருடைய வேலை அப்படி.
ஆசிரியர் ரகீம் மாணவரின் அசட்டுத் தனங்களைக் கண்டித்ததில்லை. சிறு வயதில் அவரும் அசடு என்றுதான் அழைக்கப்பட்டார். அசட்டுத்தனம் பெரிய குற்றமா? அவருடைய படிப்பும் சுமார். அவர் படித்த வகுப்பில் மொத்தம் 37 மாணவர்கள். அவர் 30ஆம் ரேங்கில் இருந்தார். ரேங்க் கார்டில் கையெழுத்துப் போடும்போது அப்பா “அசடு! அசடு!” என்று திட்டு வார்.
“எனக்குக் கீழே இன்னும் ஏழு பேர் இருக்கிறார்கள்” என்பார் ரகீம். அவர் சொல்வதைக் கேட்டு அப்பாவும் சிரித்துவிடுவார். ஓரமாய் உட்கார்ந்திருக்கும் தாத்தாவும் சிரிப்பார். தாத்தாவைக் கட்டிக்கொள்ள ரகீம் ஓடுவார்.
ஒரு சிறுவனிடம் தாத்தா முழுமையை எதிர்பார்க்க மாட்டார். அரசு நிர்வாகத்தில் பங்குபெறுவது ரகீமின் கனவு; அது நடக்கவில்லை. பத்திரிகைத் துறையில் பயணிக்கும் கனவும் அவருக்கு இருந்தது; அதுவும் நடக்கவில்லை. முட்டி மோதி ஆசிரியர் தொழிலுக்கு வந்தார். புவியியல் ஆசிரியர். தாத்தா ஞாபகம் அடிக்கடி வரும்.
அவர் காலமாகிப் பல ஆண்டுகள் ஆகின்றன. அசட்டுத்தனங்களைப் பொறுத்துக் கொள்வதுதான் அன்பில் பெரிய அன்பு என்று கற்பித்தவர் அவரே. ரகீமின் வகுப்பறையில் தாத்தா இருந்தார்.
எனவே, மாணவர்கள் வகுப்பில் அசட்டுத்தனங்களை வெளிப்படுத்தி நிற்கையில், அவர் ஒரு நாளும் கோபம் கொண்டதில்லை. சிந்துசமவெளி நாகரிகத்தைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு “கேள்வி ஏதாச்சும் இருக்கா?” என்றார்.
மணவாளன் எழுந்தான். “ஹைட்ரோ குளோரிக் அமிலம் கையில சிந்துனா ஏன் அரிக்குது சார்?’ என்று கேட்டான். பூகோள ஆசிரியரிடம் கேட்கும் கேள்வியா இது? வகுப்பறை குலுங்கிச் சிரித்தது.
சிரிப்பை அடக்க முடியாத மாணவர் சிலர், மேசையைத் தட்டிச் சிரித்தனர். மணவாளன் விழித்தான். ஆசிரியர் ரகீம் சிரிக்கவில்லை.
“சரியான கேள்வி!” எனப் பாராட்டினார். “எனக்குத் தெரியலப்பா! நாளைக்கி அறிவியல் ஆசிரியரைக் கேட்டுட்டு வந்து சொல்றேன்” என்றார். நெருங்கிப் போய் மணவாளனின் கையைக் குலுக்கினார்.
அதற்கும் வகுப்பறை கைதட்டியது. மணவாளன் முகம் ரோஜாப் பூ போல மலர்ந்தது. முகத்தைச் சுருங்கவைப்பது எளிது; மலரவைப்பதுதான் சிரமம். அதற்குத் தோளில் கை வைத்து நடக்கும் அன்பு வேண்டும்.
மக்கு மனிதர்கள்! - மேதாவிகள் வாழும் சமூகம் அல்ல நம் சமூகம். சாதாரணமானவர்கள் நிறைந்த சமூகம் இது. அர்த்தமற்ற பேச்சுகளும் அர்த்தமற்ற நம்பிக்கைகளும் உள்ள சமூகம்.
புரிந்துகொண்டவர்கள் தங்களுக்கான மனிதர்களோடு இணைந்து கொள்கிறார்கள். புரியாதவர்கள் விலகி நிற்கி றார்கள். தனிமைப்படுகிறார்கள். புத்தி சாலி தனிமைப்படுவதற்கு உதாரணம் மணிவேல். படிப்பில் புத்திசாலி.
சக மாணவர்களுடன் ஒட்டுவதில்லை. சக மாணவர்களிடம் மட்டுமா? யாருடனும் ஒட்டுவதில்லை. 21 வயதிலேயே விலங் கியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார் மணிவேல். எடுத்த காரியம் யாவிலும் வெற்றி. ஆனால், மனிதர்களிடம் மட்டும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை.
மக்கு மனிதர்கள்! மக்கு மனிதர் கள்! என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். திருமணமும் செய்து கொள்ளவில்லை. வற்புறுத்துவதற்குத் தாயும் தந்தையும் பக்கத்தில் இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் வாழ்க்கை புரிகிறது. 35 வயதில் வந்த மஞ்சள்காமாலை நோய், மணிவேலுக்கும் வாழ்க்கை யைப் புரியவைத்தது. எலும்பும் தோலும் ஆனார். துணைக்காக ஏங்கினார். துணையாக வந்தவர் குருசாமி. அப்பாவி! கல்லூரி அட்டெண்டர்.
அன்றைக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தார். வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டுவந்தார். இரவிலும் சில வேளைகளில் துணைக்கு இருந்தார். எதிர்பார்ப்பில்லா அன்பு, சிலருக்கு மட்டும் இது சாத்தியம். அறிவைச் சேர்ப்பது முக்கியம் தான்.
அதைவிட முக்கியம் மனித உறவுகளைச் சேர்ப்பது. ‘உலகத் தோடு ஒட்ட ஒழுகல்’ பற்றி 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய திருவள்ளுவர் பற்றிய நினைப்பில் மூழ்கினார் மணிவேல்.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com