வெற்றிக் கொடி

கல்வியின் அங்கம் கலைத் திருவிழா

Guest Author

மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, அதன் வழியாக அவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொண்டுவரும் யோசனை அரசுப் பள்ளிச் சூழலில் நெடுங்காலமாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

அதிலும் பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் கலைப் பண்பாட்டுக் கொண் டாட்டங்களை மாற்ற வேண்டும் என்கிற கனவு அண்மையில்தான் நனவானது.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர மாநிலப் பள்ளிக் கல்வித் துறை மூலம் கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து கலைத் திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. 1 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்காக நடனம், இசை, நாடகம், ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகள் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடத்தப்படுகின்றன.

பங்கேற்பின் அழகு

நடப்புக் கல்வியாண்டில் 2026-27 கலைத் திருவிழாப் போட்டிகள் ‘இளையோர் திறன்' என்னும் மையக்கருத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகின்றன. சிறாரிடம் மறைந்திருக்கும் படைப்பாற்றலை, கலை உணர்வைப் பூத்துக்குலுங்க வைக்கும் நோக்கில் இது திட்டமிடப்பட்டிருக்கிறது. மாணவச் செல்வங்கள் நாட்டின் தூண் போன்ற வர்கள். அவர்களின் திறமைகளை வளர்ப்பது நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஐந்து பிரிவுகளின் கீழ் 30க்கும் அதிகமான விதவிதமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான போட்டிகள் தனிப் பிரிவுகளில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பு.

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் எவ்விதத் தயக்கமும் இன்றி, குறைந்தது ஒரு போட்டியிலாவது பங்கேற்பதை உறுதிசெய்வது ஆசிரியரின் முக்கியப் பொறுப்பு. ஏனெனில், போட்டியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கேற்பதே முக்கியம்.

இதைக் குழந்தைகள் மனத்தில் பதியம் போடவேண்டிய கடமை ஆசிரியரையே சேரும். இதை முறையாக நடைமுறைப்படுத்த ஒவ்வொரு போட்டியிலும் பங்கு பெறும் மாணவ, மாணவியரின் விவரங்களைச் சேகரித்து எமிஸ் (EMIS) தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். ஒரு மாணவர் அதிகபட்சமாக எவையேனும் மூன்று தனிப் போட்டிகளிலும், இரண்டு குழுப் போட்டிகளிலும் பங்கு பெறலாம்.

வகுப்பறை நிகழ்வுகளின்போது நேரடி யாகக் கற்பிக்க முடியாத தன்னம்பிக்கை, தலைமைத்துவம் முதலான சிறந்த பண்பு களைக் கலைவிழா இயல்பாகப் புகட்டும். கலைத் திருவிழாவைக் களிப்போடு கொண்டாடுவோம், மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்வோம்

- கட்டுரையாளர்: ந.ரேவதி, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வீரனூர், நங்கவள்ளி ஒன்றியம், சேலம்; marajrevs5@gmail.com

SCROLL FOR NEXT