வெற்றிக் கொடி

பள்ளிகளை ஒளிரவைக்கும் ஆண்டு விழா

Guest Author

கல்வியாண்டு முடிவடையும் காலம் வந்துவிட்டது. பெரும்பாலான பள்ளிகளில் ஆண்டு விழா, களை கட்டத் தொடங்கிவிட்டது. மாணவர்கள் படைத்த சாதனைகள், மாணவர்களிடம் மறைந்திருக்கும் கலைத்திறமைகள், தனித்திறமைகள், அந்த ஆண்டில் பள்ளிபெற்ற விருதுகள், பள்ளி வளர்ச்சி நிகழ்வுகள் ஆகிய வற்றின் தொகுப்பாக ஆண்டறிக்கை வாசிக்கப்படும்.

இதன் மூலம் பள்ளியின் சாதனைகள் பறைசாற்றப்படுவது ஆண்டு விழாவின் சிறப்பு. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எந்தச் சூழலிலும் ஆண்டு விழா என்பது சாதனை, பிணைப்பு, கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகவே அமைகிறது.

          

இது பண்பாட்டுப் புரிதல், குழுப்பணி, தலைமைத்துவப் பண்பு, மாணவர் - ஆசிரியர் - பெற்றோர் எனும் முக்கோண உறவை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. ஒட்டுமொத்தமாக மாணவர்களின் கல்வி, இணைப் பாடத்திட்டச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து அவர்களின் ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிப்பதே ஆண்டு விழாக்களின் நோக்கம்.

100% வருகை

பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கான நாள் குறிக்கப்பட்டுக் கலை நிகழ்ச்சிக்கான பயிற்சிகள் தொடங்கிய பிறகு மாணவர்கள் பலவிதமான மாற்றங்களைக் கண்கூடாகக் காணமுடிகிறது. அதிலும், மாண வர்களின் வருகை சதவீதம் தொடர்ந்து அதிகரித்து 100% எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

மேலும் குடும்பங்களால், பெற்றோர்களால், முழுமையாகக் கவனம் செலுத்த இயலாத குழந்தைகள், அன்புக்காக ஏங்கி வகுப்பறைகளில் சற்று நெறிபிறழ் நடத்தை உடையவராக இருப்பார்கள்.

இவர்களால் வகுப்பறையில் வகுப்பு ஆசிரியர்களுடன் இணக்கமாகச் செல்ல இயலாது. இப்படிப்பட்ட குழந்தைகள் கூட வகுப்பு ஆசிரியருடன் நெருக்கமாக, இணக்கமாகச் செல்ல ஆண்டு விழா ஒரு முக்கிய பங்காற்று கிறது. ஆண்டு விழாவுக்குப் பின் இப்படிப்பட்ட சில குழந்தைகள் ஆசிரியருடன் இணக்கமாகி அந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடர்வது மகிழ்ச்சியான ஒன்றாகும்.

‘பகல் கனவு’ நூலில் கல்வியாளர் கிஜுபாய் பதேகா ஆண்டு ஆய்வு அன்று ஓர் ஆண்டு விழாவையே நடத்தி இருப்பார். அதில் மனப்பாடக் கல்வியைக் கண்டித்துக் குழந்தைகளின் உளவியல் அறிந்து விளையாடக் கற்பிக்கும் முறையை வலியுறுத்துவார். அப்படிப்பட்ட ஆண்டு விழாக்களே இன்றைய தேவை. ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவு வலுப்பெற ஆண்டு விழாக்கள் மிகவும் அவசியம்.

நினைத்தாலே இனிக்கும்

ஆண்டு விழாக்களில் முக்கிய கருப்பொருளான கலை நிகழ்ச்சிகளைத் தேர்வுசெய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் பாரம்பரிய, நாட்டுப்புற நடனங்கள், சமூக விழிப்புணர்வு நாடகங்கள், கருப்பொருள் சார்ந்த நடனங்கள், மாணவர்களின் வாசிப்புத் திறனை வெளிப்படுத்தும் கதை கூறுதல், பேச்சுக்கலையை வளர்க்கும் பட்டிமன்றம், சொற்போர் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

மேலும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடகங்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்தலாம். ஆண்டு விழாவை அந்த ஆண்டின் கற்றல் விளைவுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைத்தல் சிறப்பாக இருக்கும்.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக ஆனவுடன் கடந்த காலப் பள்ளி வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூர்வது வழக்கம். அதிலும் தங்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தியதைவிட ஆண்டு விழாவுக்குத் தயாரானபோது நடைபெற்ற சுவையானசம்பவங்களையே ஆவலுடன் பலர் பகிர்ந்து கொள்கின்றனர்.

வரவேற்பு நடனத்தில் கழுத்தில் மாட்டி இருந்த எழுத்துக்கள் கழன்று விழுந்தது; நாடகத்தில் மாறுவேடம் போடும்போது வசனம் மறந்து போய் அழுதது; ஆண்டு விழாவில் பதக்கம் பரிசாகப் பெற்றது என ஒவ்வொரு நிகழ்வும் அவர்களுக்குப் பசுமை யாக நினைவிருக்கும். ஆசிரியர்களுக்கும் குழந்தை களுக்கும் இடையே இணக்கத்தை, நெருக்கத்தை, அன்பை வளர்க்கும் மந்திரச் சொல் ஆண்டுவிழா.

- கட்டுரையாளர்: மு.தென்னவன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சக்கிமங்கலம், மதுரை; thennavanvenba@gmail.com

SCROLL FOR NEXT