சுற்றுலா

கடலூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சில்வர் பீச்சில் படகு குழாம் அமையுமா?

ம.வீரவேல்

கடலூர்: கடலூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சில்வர் பீச், ஆசியாவின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாக விளங்குகிறது. பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த செயின்ட் டேவிட் கோட்டை, நூற்றாண்டு பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் உள்ளிட்டவை சில்வர் பீச்சின் அருகிலேயே அமைந்துள்ளது சிறப்பு.

கடலூர் மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் சில்வர் பீச்சுக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் இயற்கை பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதியாக உள்ள கடலூர், கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகப்பட்டினத்துக்கு அடுத்தபடியாக

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. சில்வர் பீச்சில் அண்மைக்காலங்களில் உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி சில்வர் பீச்சில் பூங்கா, பிரத்யேக கழிப்பறைகள், அழகிய நடை பாதைகள், ஓய்வெடுக்கும் பகுதிகள், அலங்கார மின்விளக்குகள் உட்பட ஏராளமான பணிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக சில்வர் பீச்சில் மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் ரூ.4 கோடியே 98 லட்சம் செலவில் தரைதள ஓடு பதித்தல், நடைமேடை அமைத்தல், பூங்கா சீரமைப்பு, இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. தற்போது இவையனைத்தையும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட செயின்ட் டேவிட் கோட்டையும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

நீர் விளையாட்டுகளுக்கு பாதுகாப்பான இடமாக அறியப்படுகிற சில்வர் பீச்சில், சிறப்பாக செயல்பட்டு வந்த படகு குழாம் ஒன்று இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் முற்றிலுமாக அழிந்து போனது.

அதை மீண்டும் புனரமைத்து செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கடலூருக்கு புதிதாக வரும் ஆட்சியர்களிடம் இது தொடர்பாக முறையிடப்பட்டு, நேரடியாக ஆய்வும் மேற்கொண்டும் கோரிக்கை கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

“உப்பனாற்றின் கரையோரம் சில்வர் பீச் புறக்காவல் நிலையம் அருகே அலங்கார விளக்குகள், இரும்பு வேலிகள், மேற்கூரைகளுடன் அழகுற அமைக்கப்பட்டிருந்த படகு குழாம், இயற்கை பேரிடர்கள் மற்றும் பராமரிப்பின்மை காரணமாக இன்று இருந்த இடம் தெரியாமல் சிதிலமடைந்து கிடக்கிறது.

சில்வர் பீச்சில் தற்போதைய நிலையில், நெய்தல் பூங்காவைத் தவிர பொழுதுபோக்கு அம்சம் என்று எதுவுமே இல்லை. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், படகு குழாமை மீண்டும் நவீன வசதிகளுடன் கட்டமைக்க வேண்டும்” என்று கடலூர் நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய அரசு, இதில் உரிய ஆக்கப்பூர் வமான செயல்பாட்டை தொடங்க வேண் டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT