

தமிழகத்தின் முன்னணி நுகர்வோர் சாதன விற்பனைச் சங்கிலித் தொடர் நிறுவனம் டார்லிங் ரீடெய்ல் (டார்லிங் டிஜிட்டல் வேர்ல்டு). தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 190 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குநர் நவராஜ முருகன் இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்த நேர்காணல்:
உங்கள் பூர்விகம் பற்றியும் இந்த துறைக்கு வந்தது பற்றியும் சொல்லுங்கள்..
டார்லிங் குழுமத்தின் தலைவராக வெங்ட சுப்பு இருக்கிறார். தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவராகவும் அவர் பதவி வகிக்கிறார். அவரும்
நானும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெங்கட்ராயபுரம் எனும் சிறு கிராமத்தில் பிறந்துவளர்ந்தவர்கள்.
ஆனாலும் நாங்கள் 1987-ல் வேலூரில் குடியேறி, சுமார் 100 சதுர அடி பரப்பளவில் டார்லிங் ரீடெய்ல் என்ற பெயரில் மின்னணு சாதன வர்த்தகத்தை தொடங்கினோம். இப்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 190 கிளைகளாக பரந்து விரிந்துள்ளது.
மின்னணு சாதன விற்பனையில் ஈடுபட்டிருந்த நீங்கள் டார்லிங் சோலார் நிறுவனத்தை தொடங்கியது ஏன்?
நாங்கள் டிவி, பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், சிம்னி, வாஷிங் மெஷின், ஏசி போன்ற சாதனங்களை விற்பனை செய்கிறோம். இவை இயங்குவதற்கு மின்சாரம்தான் அடிப்படை. வாழ்க்கைத்தரம் உயரஉயர மின்னணு சாதன பயன்பாடு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதனால் மின் கட்டண செலவும் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என அதிகரித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் மின்சார செலவை குறைப்பதற்காக இந்தத் துறையில் கால் பதித்துள்ளோம்.
சோலார் பேனல் பொருத்த மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதை பெற்றுத் தர நீங்கள் எவ்வாறு உதவுகிறீர்கள்?
பிரதமர் மோடி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘பிஎம்-சூர்ய கர்: முப்த் பிஜ்லி யோஜனா' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன்படி நாடு முழுவதும் 1 கோடி வீட்டுக்கு சோலார் பேனல் அமைக்க அதிகபட்சம் (3 கிலோவாட்) ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி சோலார் பேனல் அமைக்க சொந்த வீடு இருக்க வேண்டும். வீடுயார் பெயரில் உள்ளதோ அவர் பெயரில் ஆதார், மின் இணைப்பு, வங்கிக் கணக்கு, பான் அட்டை இருந்தால் மானியம் பெறுவதற்கு வழிகாட்டு கிறோம்.