நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் பைசன்வேலி பகுதியில் அத்துமீறி நுழைந்து சுற்றித்திரிந்த சுற்றுலா பயணிகள்.

 
சுற்றுலா

ஊட்டி - பைசன்வேலி பகுதியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளால் ஆபத்து!

ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: சர்வதேச சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு தமிழக மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பலர், ஆபத்து அபாயமுள்ள கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி, முதுமலைக்கு செல்கின்றனர்.

தொடர் விபத்து காரணமாக ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் முதுமலையில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு வர அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி உள்ளது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள, ஆபத்தான பைசன்வேலி பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் சுற்றித் திரிவதாகவும், இதனால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஊட்டியில் இருந்து மசினகுடி, முதுமலை மற்றும் மைசூரு செல்லும் பயணிகள், கல்லட்டி மலைப்பாதையைப் பயன்படுத்தி வந்தனர். ஆபத்தான சரிவில் 36 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளுடன் உள்ள இந்த சாலை, தமிழ்நாட்டில் அதிக வாகன விபத்துகள் ஏற்படும் சாலைகளில் ஒன்றாக உள்ளது.

அனைத்து வாகனங்களையும் 2-வது கியரில்தான் இயக்க வேண்டும். 20 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது போன்ற அறிவுரைகளை சோதனைச்சாவடியிலேயே அதிகாரிகள் சொல்லி அனுப்புகின்றனர்.

கடந்த சில நாட்களாக பைசன்வேலி சாலையில் புலிகளின் நடமாட்டம் இருப்பதால், சுற்றுலா பயணிகளை புலிகள் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் காட்டு மாடுகள், கரடி போன்ற வன விலங்குகளும் தாக்கும் அபாயம் இருப்பதால் வனத்துறையினர் ரோந்துப் பணிகளை அதிகரித்து, சுற்றுலா பயணிகள் அங்கு செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்க வேண்டும், என்றனர்.

வனத்துறையினர் கூறும்போது, ‘‘பைசன் வேலி பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யாரும் அங்கு செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை மீறி சிலர் செல்வதாக புகார்கள் வந்துள்ளன. அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT