

ஆசியாவின் மிகப்பெரிய அலைப்படுகை: சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) தையூரில் உள்ள அதன் டிஸ்கவரி வளாகத்தில் ஆசியாவின் மிகப்பெரிய ஆழமற்ற அலைப்படுகையை நிறுவியுள்ளது. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன ஆராய்ச்சி மையம், சிக்கலான கடலோரப் பொறியியல் சவால்களைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கடல் அறிவியல் - பொறியியல் துறைகளைக் கணிசமாக முன்னேற்றும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஆழமற்ற அலைப்படுகை, வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்காமல் துறைமுகம், நீர்வழி ஆராய்ச்சியில் நாட்டின் திறன்களை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நன்னீர் உயிர்ப்பன்மைப் பகுதி: சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature) மேற்குத் தொடர்ச்சி மலைகளை முக்கியமான நன்னீர்ப் பல்லுயிர்ப் பெருக்க இடமாகப் பட்டியலிட்டுள்ளது. உலகளாவிய முதல் நன்னீர் விலங்கின மதிப்பீடு, அச்சுறுத்தப்படும் நன்னீர் உயிரினங்களுக்கான முக்கியமான இடமாக இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளை அடையாளம் கண்டுள்ளது.
உலக அளவில் கால் பகுதி நன்னீர் உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயிர்ப்பன்மைக்கு மிக முக்கியமானவை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த மதிப்பீடு 23,496 நன்னீர் உயிரினங்களை உள்ளடக்கியது.
ஜிபிஎஸ் நோய்: மகாராஷ்டிரத்தின் புணேயில் கில்லன்-பாரே நோய் (GBS) மக்களைத் தாக்கியது. தீவிரமான நரம்பியல் கோளாறான கில்லன்-பாரே தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. கில்லன்-பாரே நோய்க்குறி என்பது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு புற நரம்பு மண்டலத்தைத் தவறாகத் தாக்கும் ஓர் அரிய நரம்பியல் கோளாறு. இந்தத் தன்னுடல் தாக்க எதிர்வினை தசைப் பலவீனம், உணர்வின்மை, பக்கவாதம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
இது எந்த வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும், பொதுவாகப் பெரியவர்கள், ஆண்களை அதிகமாகப் பாதிக்கிறது. இந்நோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதேநேரம், முந்தைய வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றால் பெரும்பாலும் இது தூண்டப்படுகிறது.
டீப்சீக்: செயற்கை நுண்ணறிவு உலகில், அதிவேக மாற்றத்தையும் பங்களிப்பையும் உருவாக்கி வருகிறது டீப்சீக். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் எவ்வாறு
உருவாக்கப்படுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன, பல துறைகளில் செயல்படுத்தப்படுகின்றன என்பதை இது மறுபரிசீலனை செய்துவருகிறது.
முன்னோடி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப்சீக், இயந்திரக் கற்றல் (ML), இயற்கை மொழிச் செயலாக்கம் (NLP), தரவுப் பகுப்பாய்வு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சிக்கலான சவால்களுக்குத் தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலையில் உள்ளது.
டீப்சீக் என்பது பல்வேறு துறைகளுக்கான நுண்ணறிவு அமைப்புகள், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் தீர்வுகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற முன்னோடி நிறுவனம்.
மிகவும் முன்னேறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களையும் தொழில் தேவைகள் சார்ந்த ஆழமான புரிதலையும் ஒருசேர இணைத்து, தரவு அறிவியல், நிஜ உலகப் பிரச்சினைகளின் தீர்வுகளுக்கான இடைவெளியை நிரப்புவதே டீப்சீக் நிறுவனத்தின் நோக்கம்.
சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பெகி வைட்சன் சாதனையை முறியடித்து, ஒரு பெண் விண்வெளியில் அதிக நேரம் நடைப்பயணம் மேற்கொண்டதற்கான புதிய சாதனையைப் படைத்தார்! அவர் மேற்கொண்ட 9 விண்வெளி நடைப்பயணங்களில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்திருக்கிறார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோருடன் இணைந்து விண்வெளியில் நடந்தபோது (EVA) இந்தச் சாதனையை நிகழ்த்தினார் சுனிதா வில்லியம்ஸ். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக ஜூன் 2024 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த இருவரும், விண்வெளி நிலையத்திற்கு வெளியே பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். நாசாவின் அனைத்து விண்வெளி நடைப்பயணப் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.