சுற்றுலா

ரீயூனியன்: உயிரோடு இருக்கும் எரிமலைக்கு ஒரு சுற்றுலா!

யாதும் ஊரே யாவரும் கேளிர்

மலையப்பன் நாகலிங்கம்

பல நேரம் எனது கட்டுரைகளில் செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் ஒரே பயணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களைச் சுற்றி பார்ப்பது பற்றி குறிப்பிட்டு வருகிறேன். அந்த வரிசையில் இப்போது மொரிசியஸில் இருந்து கூப்பிடும் தொலைவில் அமைந்திருக்கும் ரீயூனியன்.

இந்தக் குட்டி தீவு பிரான்சுக்கு சொந்தமானது. சுமார் 9 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் தமிழர்கள்! ஆனால் பெரும்பாலானோருக்கு தமிழ்ப் பேசத் தெரியாது. மொரிசியஸில் இருந்து சுமார் 45 நிமிடத்தில் ரீயூனியன் தலைநகர் செயின் டெனிஸை (SAINT DENIS) அடைந்து விடலாம்.

சாலையின் ஒரு புறம் நம்மை தொட்டுவிடத் துடிக்கும் கடல் அலைகள், மறுபுறம் பாறைகள் விழாமல் இருக்க வலைகள் போர்த்தப்பட்ட மலைகள் என்று அத்தனை அழகும் கூடவே வருகிறது. இங்கே வருபவர்கள் மதம், மொழி, பாகுபாடு பாராமல் முதலில் செல்லும் இடம், பிளாக் விர்ஜின் மேரி (BLACK VIRGIN MARY) தேவாலயம். முழுவதும் அடர்த்தியான கருப்பு நிறத்தில் மிளிரும் இந்த தேவாலயச் சிலையில் கருணை ஒளிர்கிறது.

ஒவ்வொரு வருடமும் மே முதல் நாள் அன்று இங்கு நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஐரோப்பிய நாட்டுக்குப் பயணம் செல்ல நினைக்கும் கனவு நனவாகாமல் இருக்குமானால் , நீங்கள் ஒரு முறை ரீயூனியன் வந்து பாருங்கள் போதும், ஐரோப்பா சென்று வந்தது போல் உணர்வீர்கள்.

இங்கும் கரும்புத்தோட்ட கூலிகளாகத் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. உலகபாரம்பரிய பூமியென யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு இருப்பது ரீயூனியனின் மற்றொரு சிறப்பு. மொரிசியஸை போலவே கொடிய விலங்குகள் இல்லாத இந்தத் தீவுக்கு அருகில் உள்ள மற்றொரு நாடு மடகாஸ்கர்.

ரீயூனியன் தீவுக்குச் செல்வோர் மிஸ் பண்ணாமல் பார்க்கும் இடம் PITON DE LA FOURNAISE. இன்றளவும் உலகில் உயிரோடு இருக்கும் எரிமலைகளில் ஒன்று இது. உலகின் உயரமான, அடிக்கடி குமுறும் எரிமலைகளில் ஒன்று என்று அழைக்கப்படும் இந்த எரிமலை, சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்ததாகக் கருதப்படுகிறது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலையைக் காணச் செல்லும் போது அதன் வழியில் நீங்கள் காணும் மணற் பரப்புகளும் சமவெளிகளும் இன்னும் கூடுதல் அழகு சேர்க்கிறது. என்னது எரிமலைக்கு சுற்றுலாவா? என்று யோசிக்காதீர்கள்.

          

அரசின் எல்லாவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கூடவே வரும். கவலையை விடுங்கள்! ரீயூனியனின் மற்றொரு சிறப்பு, டால்பின் மற்றும் திமிங்கலங்களை காணுதல். ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் முதல் வாரம் வரை டால்பின்கள் மற்றும் திமிங்கிலங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

எனவே உங்கள் பயணத்தை அந்த மாதங்களிலும் திட்டமிடலாம். சீறி சிலிர்க்க வைக்கும் கடல் பயணத்தில் தெரியும் கரையோர அழகு மனதை கவர்கிறது. இந்த டால்பின் மற்றும் திமிங்கிலங்களைக் காணும் பயணத்தில் சுமார் 2 மணி நேரம் நீங்கள் கடலில் செலவிட நேரிடும். உங்கள் படகோட்டிகளும் இயன்ற வரை திமிங்கலங்களைக் காண நெருக்கமாகவே அழைத்துச் செல்கிறார்கள்.

இந்தியா தொடங்கி எத்தனையோ நாடுகளில் நீங்கள் பாரா கிளைடிங் (PARA GLIDING) செய்திருப்பீர்கள். ஆனால் ரீயூனியனின் செயின்ட் -லியூ (SAINT – LEU) வின் மேல் பறந்து சாகசம் செய்யும் போது, கீழே தெரியும் வண்ணக் கடலின் அழகை பார்த்தபடி அந்தரத்திலேயே வசிக்கலாம் போல தோன்றும். சுமார் 800 முதல் 1500 மீட்டர் வரை நம்மை தூக்கிச் செல்லும் இந்த ஒன்றரை மணி நேர பாரா கிளைடிங் அனுபவம் ஆறு வயது குழந்தைக்குக் கூட கிடைப்பது இங்கு கூடுதல் சிறப்பு.

குகைகளைக் காண்பது ஒருவகை சுற்றுலா என்பது போல தங்கும் இடங்களையே குகைகள் போல் அமைக்கும் காலம் வந்துவிட்டது. ஆனால் நிஜத்துக்கும் நிழலுக்கும் வித்தியாசம் உண்டு தானே. ரீயூனியனில் எரிமலை குழம்புகளால் இயற்கையில் உருவான குகைகள் நிறையவே வித்தியாசம் காட்டுகின்றன.

இன்னும் சொல்லப்போனால் நாம் அறிந்திராத எரிமலையில், எரிமலையியல் (VOLCONOLOGY) மற்றும் புவியியல் (GEOGRAPHY) பற்றி சுவாரஸியமாகத் தகவல் பெற இந்த எரிமலை குகை டூர் ‘must visit' என்று சொல்லலாம். நூறு முறைக்கு மேல் நெருப்பு குழம்புகளை வெளியிட்ட, ஆறு போல் ஓடச் செய்த 2 எரிமலைகள் இத்தீவின் சிறப்பம்சம் என்றாலும் இங்கு புளு லானா டனல் (BLUE LANA TUNNEL) என்று அழைக்கப்படும் இடத்தில் ஆரஞ்சு, நீலம் என பல வண்ணப் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம் .

நீங்கள் கொஞ்சம் வரலாற்றில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கரும்புத் தோட்ட உரிமையாளரான DOMAINE DU GRAND HAZIER இல்லம் என்று அழைக்கப்படும் இந்த இடம் அங்கீகரிக்கப்பட்ட பிரெஞ்சு வரலாற்று நினைவுச் சின்னமாகவும் மிகப்பெரிய தோட்டம், பழ மரங்கள், பூச்செடிகள் என்று உங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும். என்ன கொஞ்சம் சோம்பல் படாமல் நடக்க வேண்டும், அவ்வளவே.

ரீயூனியன் தமிழர்கள் மிகவும் அன்பானவர்கள். கோயில்கள், சாப்பாடு, வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள் என நிறைய விஷயங்களை நம் ஊர் போலவே அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இங்கு தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலம் பேசுவோரும் குறைவென்றே சொல்லலாம்.

இரவு நேர நடன விடுதிகள், பப்புகள் என குறைவே இல்லாத தீவு ரீயூனியன்.

எனவே சுற்றுலாவையும் தாண்டி உங்கள் மாலை நேர இளைப்பாறுதலுக்கும் பஞ்சமே இல்லாத இடம் இது. மாலை அல்லது இரவு நேர பொழுதை கழிக்கத் திட்டமிடுவீர்களேயானால் மறக்காமல் சீகா நடனம் அல்லது இசை எங்கே இருக்கிறது என்று தேடிப்போய் அனுபவியுங்கள்.

காஸ்ட்லியா இருக்குமோ? - ரீயூனியனுக்கு செல்வோர் ‘ரெம்ப காஸ்ட்லியா இருக்குமோ?’ என்று கவலைப்பட வேண்டாம். ஓரளவுக்கு நம் பட்ஜெட்டில் அடங்குவது போன்ற விஷயங்கள் இங்கு கிடைக்கின்றன.

‘நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்’ என்று இன்டர்நெட்டில் மேய்ந்து, மேய்ந்து சுற்றுலா செல்பவரா நீங்கள்?. ரீயூனியனில் நீங்கள்

பெரும்பாலும் ஒரு முகவரை தேர்ந்தெடுப்பது சற்றே உங்கள் சிரமத்தைக் குறைக்கும்.

‘மேற்கத்திய தீவாச்சே அப்போ இந்தியன் ரெஸ்டாரன்ட்?’ தாராளமாகக் கிடைக்கும், கவலை வேண்டாம். ரீயூனியனில் நிறைய தமிழ் முகங்களைப் பார்க்க முடிவது போல நிறைய தமிழ்க் கோயில்களும் உண்டு. விசேஷ காலங்களில் அப்படியே நம்ம ஊரில் இருப்பது போன்ற உணர்வு இருக்கும்.

எப்படிச் செல்வது? - சென்னையிலிருந்து ரீயூனியனுக்கு நேரடி விமானங்கள் இல்லை. சென்னையில் இருந்து மொரிசியஸ். அங்கிருந்து ரீயூனியன் - இதுவே சிறந்த வழி. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மொரிசியஸுக்கும் சரி ரீயூனியனுக்கும் சரி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு விசா தேவை இல்லை.

ரீயூனியனுக்கு நீங்கள் செல்ல தேவையான வவுச்சர் போன்ற அனைத்தையும் உங்கள் பயண முகவரே செய்து தருவார். வேற என்ன வேணும்? ஒற்றைச் செலவில் இரட்டை நாடு. ஜாலியா கிளம்புங்க.

- malaipa@yahoo.in

SCROLL FOR NEXT