கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு 12 மீட்டருக்கும் மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு வரும் டிச.1-ம் தேதி முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கடந்த மே 7-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கொடைக்கானல் செல்ல வத்தலக்குண்டு, பழநி மற்றும் அடுக்கம் வழியாக 3 வழிகள் உள்ளன. மலைப்பாதையில் ஏராளமான அபாயகரமான வளைவுகள், பள்ளத்தாக்குகள் உள்ளன.
அதனால் நீளமான வாகனங்கள் மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் திரும்புவதற்கு சிரமம் ஏற்படுவதோடு, அந்த வாகனங்களால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதைத் தடுக்க, வரும் டிச.1-ம் தேதி முதல் வத்தலக்குண்டு காட் ரோடு - கொடைக்கானல் சாலை, அய்யம்பாளையம் - சித்தரேவு - தாண்டிக்குடி சாலை, தருமத்துப்பட்டி - பன்றிமலை - மணலூர் - தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம் - பாச்சலூர், பழநி - சவரிக்காடு - வடகவுஞ்சி, பெரியகுளம் - அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 12 மீட்டருக்கும் மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக திண்டுக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார்.