கோவை செம்மொழிப் பூங்காவைப் பார்வையிட நேற்று திரண்ட பொதுமக்கள். | படம்: ஜெ.மனோகரன் |
கோவை: கோவை செம்மொழிப் பூங்காவைப் பார்வையிட குழந்தைகள், பெண்கள் என குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் நேற்று உற்சாகத்துடன் படையெடுத்ததால், பூங்கா வளாகம் களைகட்டியது. விடுமுறை நாளான நேற்று ஒருநாளில் மட்டும் 27 ஆயிரத்து 450 பேர் செம்மொழிப் பூங்காவை பார்வையிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவை பார்வையிட கடந்த 11-ம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம்.
நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.5 மற்றும் கேமரா உள்ளிட்டவற்றுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய தாவரவியல் பூங்காவாக அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவைப் பார்வையிட பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர். செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்ட மூன்று நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர்.
விடுமுறை நாளான நேற்று காலை முதல் செம்மொழிப்பூங்காவைப் பார்வையிட பொதுமக்கள் ஆர்வத்துடன் வரத் தொடங்கினர். பூங்காவின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ‘க்யூ ஆர்’ கோடினை ஸ்கேன் செய்தும், நம்ம கோவை ஆப் மூலமாகவும், பூங்காவிற்கான நுழைவு கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், பணம் செலுத்தி டிக்கெட் பெற இரு கவுண்டர்களும் இயங்கின.
நேற்று மதியமே இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. குழந்தைகள், பெண்கள் என குடும்பம், குடும்பமாக கூட்டம் குவிந்ததால் செம்மொழிப்பூங்கா களைகட்டியது. ‘பூங்காவில் உள்ள பூக்களைப் பறிக்க கூடாது, புல் தரையில் நடக்கவோ, அமரவோ கூடாது’ என தொடர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. உற்சாகம் குறையாமல் பொதுமக்கள் பூங்காவை சுற்றி வந்தனர்.
சிறுவர்கள் விளையாடும் இடம், ரோஜா தோட்டம், செயற்கை நீரூற்று உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி மற்றும் பேட்டரி கார் வசதி செய்யப்பட்டு இருந்தது.
நேற்று மாலை 6.30 மணியுடன் பூங்காவில் நுழைய டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் பூங்காவை பார்வையிட்டனர். செம்மொழிப் பூங்கா வாகன நிறுத்துமிடம் நிரம்பிய நிலையில், நஞ்சப்பா சாலை மற்றும் பார்க்கேட் பகுதியில் சாலையோரம் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செம்மொழிப் பூங்கா பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் செல்போனை பயன்படுத்தியதால் நெட்வொர்க் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்வதிலும், டிக்கெட் பெறுவதிலும் சற்று தாமதம் ஏற்பட்டது. பணம் செலுத்தி டிக்கெட் பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வந்தது.
செம்மொழிப் பூங்காவில் கட்டணம் செலுத்துவது மட்டுமின்றி, செல்போன் மூலம் சமூக வலைதளங்களில் லைவ் செய்யவும் பலரும் முயற்சிப்பதால், நெட்வொர்க் பிரச்சினை ஏற்படுவதாக பலரும் தெரிவித்தனர்.
இதனை சரி செய்ய இப்பகுதியில் மொபைல் டவர்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறை நாட்களில் மட்டும், மாலை 7 மணிக்கு புதிலாக 8 மணி வரை பூங்காவை பார்வையிடும் வகையில் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.