ஊட்டி: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, மேட்டுப்பாளயைம்- ஊட்டி இடையே கோடைகாலச் சிறப்பு மலை ரயில் சேவை வரும் 27-ம் தேதி முதல் ஜூலை மாதம் 6-ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மலைரயில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்றது. இதில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், கோடை சீசனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையம்- குன்னூர்-ஊட்டி இடையே தலா ஒரு முறை, ஊட்டி- குன்னூர் இடையே தலாநான்கு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோடைகாலச் சிறப்பு மலை ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இம்மாதம் 27-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஊட்டி முதல் மேட்டுப்பாளையம் வரை சனி மற்றும் திங்கள்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதில், மேட்டுப்பாளைம் முதல் குன்னூர் வரை 40 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும்.
குன்னூர் முதல் ஊட்டி வரையில் மொத்தம் 220 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும். மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். காலை 11.25 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்படும் ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
ஊட்டி முதல் கேத்தி வரை சிறப்பு ரயில் வரும் 27-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் இயக்கப்படும். இதில், 80 முதல் வகுப்பு மற்றும் 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். ஊட்டியிலிருந்து காலை 9.45, 11.30 மற்றும் மதியம் 3 மணி என 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும். சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.