புதுச்சேரி கடற்கரை சாலை | கோப்புப்படம்

 
சுற்றுலா

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர டிராம் வண்டிகளை இயக்க திட்டம்: உயர் அதிகாரிகள் ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுச்சேரி: சுற்றுலாப் பயணிகளைக் கவர புதுச்சேரியில் டிராம் வண்டி சேவையைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட ஆய்வை நடத்திய அதிகாரிகள், தொடர்ந்து அதுகுறித்து மேலும் ஆலோசனை நடத்தினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இயக்கப்படுவது போல டிராம் வண்டி சேவையை தொடங்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. புதுச்சேரியின் பிரதான பகுதியான ஒயிட் டவுனில் இந்த டிராம் வண்டியை இயக்குவது குறித்து போக்குவரத்து, சுற்றுலாத் துறை, நகராட்சி, பிஆர்டிசி அதிகாரிகள் நேற்று முதல்கட்ட ஆய்வு நடத்தினர்.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “டிராம் வண்டி சாலைகளின் நடுவே தண்டவாளங்களில் இயக்கப்படும். மற்ற வாகனங்களுக்கு மத்தியில் குறைந்த வேகத்தில் பயணிகளை அழைத்துச் செல்லும். புதுச்சேரி கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள பார்க் விடுதியில் இருந்து கடற்கரைச் சாலை, பிரெஞ்சு தூதரகம், ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை. ஒயிட் டவுன் பகுதியில் இந்த டிராம் வண்டியை இயக்கத் திட்டமிட்டுள்ளோம்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் - சுற்றுலாத்துறை இணைந்து இந்த டிராம் வண்டி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இன்ஜின் மற்றும் 3 பெட்டிகளுடன் பேட்டரி டிராம் வண்டி இயக்கப்படும். இதற்கு ஒரு வண்டிக்கு ரூ.1 கோடி வரை செலவாகும்.

அத்துடன் ஒயிட் டவுன் பகுதியில் முக்கிய இடங்களுக்கு டிராம் செல்ல இயலுமா என்பதையும் ஆராய்கிறோம். தாவரவியல் பூங்காவில் இருந்து டிராமை இயக்க முடியுமா என்றும் ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT