சுற்றுலா

நேபாளம்: பனி படர்ந்த அழகின் இலக்கணம் | சுற்றுலா ஸ்பெஷல்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

மலையப்பன் நாகலிங்கம்

நேபாளம் என்ற உடனே டக் என்று நினைவுக்கு வருவது காத்மாண்டு மற்றும் பசுபதி நாதர் ஆலயம். ஆனால் ஒரு 200 கிலோமீட்டர் பயணிப்பீர்களேயானால் சொர்க்கத்தின் ஒரு பகுதியை கண்ணால் காண்பீர்கள்.

ஆம் ..! பொக்காரா… நேபாளத்தின் இரண்டாவது பெரிய நகரமான பொக்காரா, நேபாளத்தின் சுற்றுலா தலைநகரம், சிறந்த மலைப்பிரதேசம் என நிறைய புகழை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மிக இதமான கால நிலையை பெரும்பாலும் வருடம் முழுவதும் கொண்டிருக்கும் பொக்காரா, அன்னபூர்ணா, தவுலகிரி, மனசுலு ஆகிய மலைகளின் அழகை கண்ணுக்கருகே கொண்டு வந்து நிறுத்துகிறது.

இமயமலையின் பிரம்மாண்ட காட்சியான பொக்காரா, சூரிய உதயம், நீர்வீழ்ச்சி, மலையேற்றம் மற்றும் சும்மா ஜம்முன்னு பறக்க வைக்கும் பாரா கிளைடிங் போன்றவற்றையும் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் ஒரு ரவுண்டு கட்டிவிட்டு அப்படியே கொஞ்சம் சீக்கிரமான மாலை நேரத்திலேயே ஃபெவா ஏரி பக்கம் வந்து விடுங்கள்.

இந்த ஏரி, இயற்கை அழகின் இருப்பிடம் பிறப்பிடம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். மாலை நேரத்தில் சற்றே சூரியன் மறைகிற மஞ்சள் வெயிலில் இந்த ஏரியில் செய்யும் படகு சவாரிக்கு இணையேதும் இல்லை.

          

பராஹி கோயில்

பொக்கராவில் அமைந்துள்ள ஃபெவா ஏரி, நேபாளத்தின் 2-வது மிகப்பெரிய நன்னீர் ஏரி. ஏரியின் படகு சவாரிகளில் நிறைய உள்ளூர் மக்களையும் காண முடிகிறது.

ஏனென்றால் ஏரியின் மத்தியில் அமைந்துள்ள தல பராஹி கோயில், நேபாள மக்களிடையே மிகப் புகழ் பெற்ற மற்றும் கலாச்சார அடையாளமாகத் திகழும் இந்த பராஹி கோயில் துர்கையின் வடிவமான பராஹி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இது ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரே தீவு கோயில் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஏரியில் படகு சவாரியின் போது தெளிந்த நீரில் நிழலாய்ப் படர்ந்து நெஞ்சம் அள்ளும் அன்னபூர்ணா மலை தொடரின் அழகு சும்மா வேற லெவல். படகு சவாரி முடித்து பசி எடுக்கும் போது கவலையே இல்லை.

ஏரியை சுற்றி நிரம்பிக் கிடக்கும் உணவகங்கள் ஏரியின் அழகை ரசித்தப்படியே உங்கள் மனதையும் வயிற்றையும் நிரப்பும். இங்கு பொக்காராவின் தங்கும் விடுதி பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

ஒவ்வொரு விடுதியும் அழகாய், நேர்த்தியாய், நிறைய பசுமை கொண்டு, நம் பர்சை பதம் பார்க்காத விலையில் அனுபவிக்கக் கிடைக்கின்றன.

அன்னபூர்ணா மலைத்தொடர்

பொக்ராவிலும் ஒரு குட்டி விமான பயணம் கிடைக்கிறது. காத்மாண்டுவில் விமான பயணத்தை அனுபவித்தவர்கள்... அதான், அங்கேயே போயிட்டோமே என்று கேட்காதீர்கள்.

பொக்கராவில் செல்லும் சுமார் 30 நிமிட விமான பயணம் அன்னபூர்ணா மலைத்தொடரின் மேல் பரந்து சென்று,பளிங்கு போல் மிளிரும் பனி படர்ந்த அழகின் இலக்கணத்தை சொல்கிறது. இந்தப் பயணம் முடிந்த உடன் உங்கள் மனம் சொல்லும், ‘நல்ல வேளை இதை மிஸ் பண்ணல!’ என்று.

சித்வான்...

நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற சித்வான் தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயம் என்பதையும் தாண்டி, ஜங்கிள் லாட்ஜ்கள் என அழைக்கப்படும் இயற்கையோடு இணைந்த வனப்பகுதி, தங்குமிடங்களுக்கு புகழ்பெற்று இருக்கிறது. இங்கே தங்குவதை அப்படியே கொஞ்சம் விஷுவலைஸ் பண்ணுவோம்.

அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நமது வாகனம், முற்றிலும் இருள் சூழ்ந்த இடங்களில் செல்கிறது. ஒரு நதிக்கரையை அடைந்ததும் நமது வண்டியோட்டி தன் கையில் வைத்திருக்கும் சிறிய டார்ச்சில் இருந்து நதிக்கரையின் மறுபகுதிக்கு வெளிச்சத்தை சிக்னலாக அனுப்புகிறார்.

பிறகு அங்கிருந்து ஒரு டார்ச் லைட் வெளிச்சம் பதில் சிக்னலாக வருகிறது. சற்று நேரத்தில் நம் அருகே படகு வந்து நிற்கிறது. நம்மையும் நமது லக்கேஜ்களையும் ஏற்றிக் கொண்டு படகு நம் தங்குமிடம் செல்கிறது.

நிலவொளியில் இந்தப் படகு சவாரி, நம்மை அறியாமலேயே, ‘அமைதியான நதியினிலே ஓடம்’ பாடலை முனுமுனுக்க வைக்கிறது. ஒரு வழியாக நதிக் கரை தங்குமிடத்துக்கு வந்தடைவீர்கள். ஆனால் அங்கு திரும்பிய பக்கம் எல்லாம் பற்றாக்குறை வெளிச்சத்துடன் இருக்கும்.

ஏனென்றால் இங்கு மின்சார வசதிகள் இல்லை. உணவகத்தில் மட்டும் நீங்கள் மொபைலை சார்ஜ் செய்ய வசதி உண்டு. உங்கள் அறையை திறந்தவுடன் அங்கே ஓரிரு மண்ணெண்ணை விளக்குகள் மட்டுமே இருக்கும்.

ஆனால் நிசப்தம் நிறைந்த, அடர்ந்த வனப்பகுதி உங்கள் இரவு தூக்கத்தைச் சுகமாக்க, விடியற்காலை எழுந்து அறைக் கதவை திறந்ததும் உங்கள் கண் முன்னால் தெரியும், பாதிப் பனியில் மறைந்திருக்கும் நதியும் அதன் தெளிந்த நீரோட்டமும்.

காண்டாமிருகத்தின் கால் தடம்

கொஞ்சம் நதிக்கரைக்குச் சென்றால் காண்டா மிருகத்தின் கால் தடம் சற்றே த்ரில்லை துவக்கி வைக்கிறது. அன்றைய பொழுது துவக்கம் யானை சவாரி வழியாக ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் காண நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.

ரொம்பவே அசால்ட்டாக யானை நதியை, கடந்து காட்டுக்குள் நுழையும்போது கொஞ்சம் அடி வயிற்றுக்குள் பயம் பந்தாக உருள்கிறது.

சரசரவென்று சருகுகள் மிதிபட நம் இரண்டு பக்கமும் கீறிவிட துடிக்கும் காட்டு மரம், செடிகளுக்கு இடையே தொடரும் பயணத்தில் ஓரிரு இடங்களில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களைக் காண முடிகிறது.

இக்காட்டு பயணம் முடிந்ததும் நம் தங்கும் விடுதியில் பின்புறம் உள்ள மற்றொரு அடர்ந்த காட்டுக்குள் நடைபயணம். இங்குதான் புலி நடமாட்டம் இருக்கும் என கூறி நம்மை அழைத்துச் செல்கிறார்கள் .

திடீரென்று புலி வந்தால் பயப்படாதீர்கள். ‘புலியின் கண்களை நேருக்கு நேர் பாருங்க’ என்று அந்த கைடு சொல்லும் போது பயத்துக்குப் பதில் நமக்குச் சிரிப்பு வந்து விடுகிறது.

காட்டுக்குள் நடைப்பயணம் முடிந்ததும், ‘தேவை இல்லாம எங்களை ஏன்யா நடக்க விட்டீங்க. நாங்க பாட்டுக்கு ரூம்லயே இருந்திருப்போம்’ என்ற நம் முணுமுணுப்பு நமக்கு மட்டுமே கேட்கிறது.

ஒரு வழியாகக் கொஞ்சம் த்ரில்லோடும் நிறைய த்ரில் என்ற பெயரோடும் ஜங்கில் லாட்ஜ் பயணம் முடிவு பெற்றாலும் இதுவும் ஒரு மறக்க முடியாத அனுபவம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆன்மீக இதயம்

சரி... மீண்டும் கொஞ்சம் பக்தியின் பக்கம் வருவோம். உலகெங்கிலும் பக்தர்கள் உச்சரிக்கும் ஒரு பெயர் லும்பினி கபிலவஸ்துவில் உள்ள லும்பினிதான் புத்தர் பிறந்த இடம்.

உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து குவியும், புண்ணியதலமான லும்பினி, நேபாளத்தின் ஆன்மீக இதயம் என்று அழைக்கப்படுகிறது.

கலாச்சாரம், அமைதி, பண்பாடு, ஞானம் போன்றவற்றின் அடையாளமாக லும்பினி திகழ்வதால் அனைத்து மதத்தினரும், பயணிகளும் இங்கே குவிக்கிறார்கள். நேபாளத்தின் இந்திய எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் லும்பினி புத்தர் பிறந்த இடம்.

உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் லும்பினியில் அசோகச் சக்கரவர்த்தியால் அமைக்கப்பட்ட தூண், புத்தர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான மாயாதேவி கோயில், புத்தரை மாயாதேவி குளிக்க வைத்ததாக நம்பப்படும் புனித குளம் என்று வரலாற்று அடையாளங்கள் இங்கே நிரம்பிப் கிடக்கின்றன.

நேபாளத்துக்குச் செல்பவர்கள் பயண தூரத்தைப் பற்றி கவலைப்படாமல் லும்பினிக்குச் சென்று வாருங்கள். சரி, இப்போது சாகச விளையாட்டுப் பகுதிக்குள் நுழைவோம்.

சுற்றிலும் விண் முட்டும் மலைகளும், படர்ந்து விரிந்த பசுமையும் நிறையவே இருக்கிற நேபாளம் சாகச விளையாட்டுகளுக்கும் மிகவும் பெயர் பெற்றது. அதிலும் குறிப்பாக பஞ்சி ஜம்ப்… த்ரில்லின் உச்சகட்ட விளையாட்டு, உலகம் முழுவதும் புகழ்பெற்றிருக்கிறது.

குஷ்மா பஞ்சி ஜம்ப்

நேபாளத்தில் சுமார் பத்து இடங்களில் பஞ்சி ஜம்ப் விளையாடக் கிடைத்தாலும் குஷ்மா பஞ்சி ஜம்ப் என்று அழைக்கப்படும் இடம் உலகின் இரண்டாவது மிக உயரமான பஞ்சி ஜம்ப் என்று புகழ் பெற்றிருக்கிறது. பஞ்சி ஜம்ப் பற்றி தெரியாதவர்களுக்கு, சுமார் 750 அடி உயரமான மலை மேல் அமைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறிய பாலத்தில் மேலிருந்து கீழே தலைகீழாக அந்தரத்தில் தொங்குவது.

ரப்பர் கயிறு போன்ற ஒன்றை கால்களில் இணைத்து அப்படியே தலைகீழ் தொங்கவிட்டு, தலைகீழாக அவர்கள் தொங்குவதைப் பார்க்கும் போது பலருக்கும் ‘அப்பா...ஆள விடுங்கடா சாமி’ என்ற ஓட்டம் பிடிக்கத் தோன்றுகிறது.

இதில் பெரிய விஷயம், பஞ்சி ஜம்பில் அந்தரத்தில் தொங்குபவர்களை, மீண்டும் மேலே இழுக்க மாட்டார்கள். அப்படியே தரையிலோ பக்கவாட்டிலோ இறங்கி மேலே ஏறி வரவேண்டும். அதுவும் பல கிலோமீட்டர் மலைப்பகுதி வழியாக.

ஆனால் இந்த த்ரல்லை அனுபவிப்பதற்காகவே நேபாள சுற்றுலாவில் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் வருகிறார்கள். உலகில் இந்தியர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் அனுமதிக்கப்படும் ஒரே நாடு நேபாளம். பிறகென்ன ஜாலியா ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க மக்களே!

- malaipa@yahoo.in

SCROLL FOR NEXT