விமானம் பஞ்சுப்பொதிகளை விலக்கி, இறங்கத்தொடங்கியதும் கீழே விரிந்திருந்த நிலப்பரப்பை ஆர்வமாய்ப் பார்க்கிறேன்.
யாரோ ஒரு பெரிய அளவுகோலை வைத்து பூமியின் மேற்பரப்பில் நேர்கோடுகளைக் கிழித்தது போல நிலம் பல பகுதிகளாக நேர்த்தியாக பிரிந்து கிடந்தது - சதுரங்களாக, செவ்வகங்களாக… சில இடங்களில் வளைவுகளாக.
மனிதனால் உருவாக்கப்பட்ட விவசாய நிலங்களா, இயற்கை தன் விரல்களால் வரைந்த மலைச்சரிவுகளா? தெரியவில்லை. பனிபடர்ந்த அட்லஸ் மலைத் தொடர், வறண்ட பீடபூமிகள், ‘ஹா…’ வென விரிந்து கிடக்கும் சஹாரா பாலைவனம் இவற்றுடன் செம்மண் நிற நகரங்கள் என இயற்கையும் மனிதனும் இணைந்து எழுதிய ஓவியம் பிரம்மாண்டமாகிக் கொண்டே வந்தது.
ஆப்பிரிக்க கண்டத்தின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டின் ஒருபுறம் அட்லாண்டிக் பெருங்கடல், மறுபுறம் மத்திய தரைக்கடல், வடக்கே ஐரோப்பா மிக அருகில். மொரோக்கோவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் குறுகிய கடல்வழியான ஜிப்ரால்டர் நீரிணைப்பு, இவ்விரு கடல்களையும் இணைக்கிறது.
மொராக்கோவின் தென்மேற்குப் பகுதியில் அட்லஸ் மலைத்தொடரின் காலடியில் சிவந்த பூமியாய் விரிந்து கிடக்கிறது மொராக்கோவின் பழைய தலைநகரான மொராகேஷ் நகரம். மொராக்கோ என்பது வெறுமனே பார்த்து மகிழ்வதற்கான சுற்றுலாத்தலம் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகள் ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கும் வரலாற்றுப் புத்தகத்தைப் புரட்டிப்பார்ப்பது போன்ற அனுபவம்.
பழமையும் புதுமையும் இயற்கையும் பிணைந்து கிடக்கும் மொராகேஷ் நகரத்துக்குள் செல்பவர்கள் எவருக்கும் ஆப்பிரிக்காவின் பண்டைய வாழ்க்கையை சில நாட்கள் எட்டிப்பார்க்கும் சுவாரஸ்யம் கிடைப்பது உறுதி.
பால்மெரை சோலைவனப்பகுதி (Palmeraie Oasis)
லட்சக்கணக்கான பனைமரங்களைக் கொண்ட பால்மெரை சோலை வனம், மொராகேஷ் நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த அல்மோஹாட் வம்ச காலத்தில் (1130 – 1269) உருவானதாகக் கூறப்படுகிறது.
இங்கு பேரீச்சம்பழ மரங்களுடன் ஆலிவ் மரங்களும் பெருமளவில் காணப்படுகின்றன. இந்த சோலைவனத்தை உருவாக்குவதற்காகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கெத்தரா (Khettara) என்ற நீர்ப்பாசன முறையைப் பயன் படுத்தியிருக்கின்றனர்.
அதாவது நீர்ப்பற்றாக்குறைக் காலங்களில் அட்லஸ் மலைத்தொடரின் அடிவாரத்திலிருந்தோ, நிலத்தடி நீர்ஓடைகளிலிருந்தோ தண்ணீரை ஈர்ப்பதற்காகப் பூமிக்கு அடியில் நீண்ட சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு, எந்தவித இயந்திர பம்புகளின் உதவியின்றி, புவியீர்ப்பு விசையின் மூலமாகவே தண்ணீரை விவசாய நிலங்களுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து மகிழ்விப் பதற்காகச் சோலைவனமெங்கும் ஒட்டகங்கள் காத்துக்கிடக்கின்றன.
பால்மெரை பேலஸ்
அங்கிருக்கும் பெரும்பாலான ஹோட்டல்கள், அரண்மனை பாணியிலேயே கட்டப்படுகின்றன. நான் தங்கியிருந்த பால்மெரை பேலஸ் விடுதி நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகி பனைமரத் தோப்புகள் சூழ்ந்திருந்த பால்மெரை பகுதியில் அட்லஸ் மலைகளின் பின்னணியில் பிரம்மாண்டமான நுழைவாயிலுடன் நம்மை வரவேற்கிறது.
மொராக்கோவின் பாரம்பரிய அரபு – மூரிஷ் கட்டடக்கலைப் பாணி, வளைந்த நுழைவாயில்கள், குதிரை லாடம் போன்ற வளைவுகள், செதுக்கப்பட்ட அலங்காரங்கள், வண்ண ஓடுகள், மர வேலைப்பாடுகள், நீரூற்றுகள், ஒவ்வொரு அறையிலும் கலைநயமிக்க மன்னர் கால இருக்கைகள், அறைக்கு வெளியே பசுமை போர்த்திய தோட்டங்கள், மொராக்கோ கட்டடக்கலையில், ஜெல்லிஜ் (Zellige) எனப்படும் சிறு வண்ண ஓடுகளை ஒன்றோடொன்று பொருத்தி உருவாக்கப்படும் மொசைக் அலங்காரங்கள், சுண்ணாம்புப் பூச்சில் செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், வண்ணம் தீட்டப்பட்ட மர வேலைப்பாடுகள் என எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பதை நாமே கணிக்க முடியாதபடியான அரண்மனை வாழ்க்கையை இந்த விடுதியில் அனுபவிக்க முடிகிறது.
அட்லஸ் மலையின் வெண்பனிச் சிகரங்கள் மூச்சுமுட்ட வைக்கின்றன. இயற்கை உருவாக்கிய நில அமைப்பும் மனிதன் உருவாக்கிய செயற்கைக் கட்டடங்களும், அழகைப் பங்கிட்டு நம்மை மகிழ்விக்கின்றன.
மொராகேஷ் – இளஞ்சிவப்பு நகரம்
1070 – 1072- களில் அல்மோரவிட் ஆட்சிக்காலத்தில் (1050 – 1147) நிறுவப்பட்ட மொராகேஷ், நீண்ட காலமாக அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்ந்தது. சிவப்பு நகரம் அல்லது இளஞ்சிவப்பு நகரம் என்று மொராகேஷ் அழைக்கப்படுவதற்குக் காரணம், இரும்பு ஆக்ஸைடு செறிந்துள்ள பூமியே.
அப்பகுதி மண்ணையும் உள்ளூரில் கிடைக்கும் சிவப்பு மணற்கற்களையும் பிசே (சுருக்கப்பட்ட களிமண் கலவை) தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடுகளும் கோட்டைகளும் இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறக்கலவையைப் பெற்றன.
வெயில் மிகுந்த பாலைவனப்பகுதி யில் அமைந்துள்ள வரலாற்றுக்காலக் கட்டடங்களின் மீது சூரியஓளி படும்போது அழகிய இளஞ்சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. அதன் பாரம்பரிய அடையாளத்தைக் காப்பதற்காக, புதியதாகக் கட்டப்படும் அனைத்துக் கட்டடங்களும் இதே இளஞ்சிவப்பு நிறத்தை பூச வேண்டும் என்ற சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
மெதினா (Medina of Marrakech)
மெதினா என்பது மொராகேஷ் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்கால நகரப்பகுதி. உயர்ந்த மதில்கள் சூழ்ந்த குறுகிய தெருக்கள், அரண்மனைகள், மசூதிகள் என பாரம்பரிய கட்டடக்கலைகள் நிறைந்த வரலாற்றுப் பெட்டகம். அதன் வாகனங்கள் நுழைய முடியாத குறுகலான தெருக்களில் நடந்து செல்லும்போது ஒவ்வொரு தெருவிலும் ஒரு வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டே செல்லலாம்.
அரண்மனைக்குள் வாழ்ந்த பெண்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என யோசித்துக்கொண்டே, மசூதிகளின் அழகை ரசித்தவாறு கடந்து சென்றோம். மசாலா மணம் நிரம்பிய வீதிகள் சிந்தனையை மயக்குகின்றன, உயரத்திலிருந்து இலாகவமாக ஊற்றும் புதினா தேநீரின் சுவை சுண்டியிழுக்கிறது.
விதவிதமான உடைகள், இயற்கை மருந்துகள், களிம்புவகை சோப்புகள், அழகுசாதனப் பொருள்கள் என குவிந்து கிடக்கும் கடைத்தெருக்கள் கண்களுக்கு விருந்தாகவும், நமது பணப்பைக்கு வில்லனாகவும் இருக்கின்றன.
கம்பள நெசவாளர்கள், தோல்பொருள்கள் தயாரிக்கும் கைவினைஞர்கள், உலோக செம்புப்பொருள் கைவினைஞர்கள் தங்கள் பாரம்பரியக்கலைகளுக்கு மெருகூட்டிக்கொண்டிருக்கிறார்கள். 21-ம் நூற்றாண்டிலிருந்து வெளியேறி வேறொரு காலத்துக்குள் நுழைந்து விட்டதைப்போன்ற உணர்வு மேலிட்டது.
கூத்தூபியா மசூதி (Koutoubia Mosque)
மொராக்கோவின் அடையாளமாகக் கருதப்படும் கூத்தூபியா மசூதி 900 ஆண்டுகள் பழமையானது. மொராகேஷின் எந்தப்பகுதியிலிருந்து பார்த்தாலும் அதன் மினாரத்தைப் (கோபுரத்தைப்) பார்க்க முடியும். இதன் கட்டுமானம் 1147-ம் ஆண்டு கலீஃபா அப்துல் முமின் என்பவரால் தொடங்கப்பட்டது.
மசூதியின் திசை மக்காவை நோக்கி அமைக்கப்படவில்லை என்ற காரணத்தினால், தற்போதையமசூதி வடிவம் 1195 – 1199 ஆண்டுகளுக்கிடையில்யாகூப் அல் மன்சூர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாம். அரபு மொழியில் குதுபியீன் என்பதற்கு புத்தக விற்பனையாளர்கள் என்று பொருளாம்.
அன்றையக் காலக்கட்டத்தில், இந்த மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான புத்தகக் கடைகளும் நூல் விற்பனை சந்தைகளும் செயல்பட்டு வந்ததால், குதுபியீன் என்பதிலிருந்து மருவி, குத்தூபியா மசூதி என்ற பெயர் பெற்றது. மினாரட் என்று சொல்லப்படும் 77 மீட்டர் 253 அடி உயரம் கொண்ட இதன் பிரமாண்டமான கோபுரத்தின் நேர்த்தி வியக்க வைக்கிறது.
பாரம்பரிய அல்மோஹாட் மற்றும் அந்தாலூசிய இஸ்லாமியக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஒன்பது நூற்றாண்டுகளைக் கடந்து, வானத்தோடு உரையாடிக்கொண்டிருக்கும் கட்டடத்தைப் பார்க்கும்போது, எத்தனை தலை முறைகளின் தொழுகைகளை இந்தச் சுவர்கள் பார்த்திருக்கும் என்று தோன்றியது.
ஜெமா எல் ஃபனா சதுக்கம்
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மொராகேஷின் பிரதான சதுக்கம் இது. 1070 களில் அல்மோரவிட்களால் மொராகேஷ் நகரம் நிறுவப்பட்ட போது ஏற்படுத்தப்பட்ட சதுக்கம். ஜெமா எல் ஃபனா என்பதற்கு இறந்தவர்களின் சபை (Assembly of the Dead) என்று பொருளாம். ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் பொருட்களை பரிமாற்றம் செய்யப்படும் இடமாக இருந்திருக்கிறது.
சதுக்கத்திற்குள் நுழைந்தவுடன், சீரகமும் இலவங்கப்பட்டையும் கலந்த மசாலா வாசனை, புதினா தேநீரின் மணம், தோல் பதனிடும் தொழிற்சாலையின் தனித்துவமான வாசனை, ஆரஞ்சுப் பழங்களின் நறுமணம் – எல்லாமும் சேர்ந்து மொரோகேஷ் க்கு தனி மணத்தை உருவாக்குகின்றன.
பகலில் பரபரப்பாக இயங்கும் இச்சந்தையின் முகம், இரவில் பாரம்பரியமும் நவீன வாழ்க்கையும் சங்கமிக்கும் திறந்தவெளி அரங்கமாக மாறுகிறது. இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், கதைசொல்லிகள், பாம்பாட்டிகள், நிகழ்த்துக் கலைஞர்கள் - என மொராகேஷின் கலாச்சார மையமாக உருப்பெறுகிறது.
மெல்லா மார்க்கெட் (Mellah Souk)
மெல்லா சவுக் என்று அழைக்கப்படும் கடைவீதி மெதினாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மெல்லா என்பதற்கு அனைத்து யூதர்களின் குடியிருப்புப்பகுதி என்பது பொருளாம். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த வணிக வீதிகளில் நடைபோடுவது சுவாரஸ்யமான ஒன்று. 1558-ம் ஆண்டு மௌலே அப்தல்லாவின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
மொரோக்கோ மக்களின் பாரம்பரியச் சந்தைகளில் இல்லாத உப்பு, மசாலாப் பொருட்கள் மற்றும் தங்கம் போன்றவற்றை யூதர்கள் பிற நாடுகளிலிருந்து கொண்டு வந்தனர்.
ஆனால் தற்போது இந்தப் பகுதிகளில் யூதர்களே இல்லையென்றாலும் அதே பொருள்கள் இன்னும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. மாலை நான்கு மணிக்கு மேல் ஏலம் நடைபெறும் நகைச்சந்தையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நெகுடிம், அலஸ்மா என இரண்டு யூத ஜெப ஆலயங்கள் வரலாற்றைப் பறை சாற்றி நிற்கின்றன.
புகைப்பட அருங்காட்சியகம் Maison de la photographie
பழைய மொராக்கோவின் புகைப்படங்களைக் கொண்ட அற்புதமானதொரு அருங்காட்சியகம், மெதினாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
1870 முதல் 1960 வரையிலான மொராக்கோவின் மக்கள், அவர்களது வாழ்க்கை, கலாச்சாரங்கள் குறித்த நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச்செல்லும் புகைப்படக் காட்சி. பேட்ரிக் மனாச் மற்றும் ஹமீத் மெர்கானி என்ற இரண்டு பிரெஞ்சு புகைப்படச் சேகரிப்பாளர்களால் 2009 ல் தொடங்கப்பட்டது.
இங்கிருக்கும் 8000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், வரலாற்றைப் பாதுகாப்பதுடன் அரேபியர்களும் பெர்பர்களும் முஸ்லிம்களும் யூதர்களும் சுமார் 300 ஆண்டுகள் அச்சமின்றி, அச்சுறுத்தல்களின்றி அமைதியான நாட்டின் குடிமக்களாக வாழ்ந்தனர் என்ற எண்ணத்தை விதைப்பதே இந்த கலாச்சார ஆவணக்காப்பகத்தின் நோக்கம் என்கின்றனர்.
இவை தவிர, ரசிக்க வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளன. பென் யூசெஃப் மதர்சாவில் (Ben Youssef Madrasa) கல்வியின் பழைய உலகமான இஸ்லாமிய கல்வி மரபையும் அற்புதமான கட்டடக்கலையையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும்.
அட்லஸ் மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள மினரா கார்டனின் (Menara gardens) வரலாற்றுச் சிறப்புமிக்க தோட்டமும் நீர்த்தேக்கமும் மொராகேஷின் நகரச் சத்தத்திலிருந்து விலகியிருப்பதற்கான ஏகாந்தமான இடம். கலை நயமிக்க பஹியா அரண்மனையின் (Bahia Palace) முற்றங்களும் தோட்டங்களும் பெண்கள் வசித்த பகுதிகளும் வரலாற்றுக்காலத்துக்குள் இழுத்துச் செல்கின்றன.
பல நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் பழைய நகரத்தின் சிவப்பு நிறச்சுவர்களுக்குள் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு, இயற்கையழகு என காலத்தின் அரவணைப்பில் உறைந்துகிடப்பது விவரிக்க முடியாத அனுபவம்.
வறண்ட பாலைவனச் சூழலிலும் இயற்கையோடும் பாரம்பரியக் கலைகளோடும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உழைப்பு வியக்க வைக்கிறது. இந்த இளஞ்சிவப்பு நகரத்தின் நினைவுகள், மனதை விட்டு நீங்காத மகிழ்வலைகளாக எப்போதும் தாலாட்டிக் கொண்டிருக்கும்!
- devianand71@gmail.com