கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையால் மணப்பாட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
‘ஏழைகளின் கோவா’ என்றழைக்கப்படும் மணப்பாடு சிறந்த கட்டிடக் கலைகள் நிறைந்த பகுதியாகும். மேலும், சிறந்த சினிமா படப்பிடிப்பு தளமாக உள்ளது. மணப்பாட்டில் ஒரு புறம் கடல் அமைதியாகவும், மறுபுறம் ஆக்ரோஷமாகவும் இருக்கும். தற்போது கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் ஆங்காங்கே மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரைச் சாலையோரம் அமைந்திருப்பதால் கன்னியாகுமரி, திருச்செந்தூர் செல்லும் சுற்றுலா, ஆன்மிக பயணிகள் மணப்பாடும் வந்து செல்கின்றனர்.
தற்போது அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக கார், வேன்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மணப்பாடு மணல் குன்றின் மீது உள்ள பிரசித்தி பெற்ற திருசிலுவை நாதர் கோயில் பின்புறம் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால் மணப்பாட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.