ஊட்டியில் இயக்கப்படும் மலை ரயில்.
ஊட்டி: நீலகிரி மலை ரயில் ‘யுனெஸ்கோ’ பாரம்பரிய அந்தஸ்து பெற்றது. இதில், பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையம்-குன்னூர்-ஊட்டி இடையே தலா ஒரு முறை, ஊட்டி-குன்னூர் இடையே தலா 4 முறை மலை ரயில் இயக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர் பண்டிகை கால விடுமுறையையொட்டி, மேட்டுப்பாளையம்-ஊட்டி, ஊட்டி-குன்னூர் மற்றும் ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இம்மாதம் 25, 27, 29, 31 ஆகிய தேதிகளிலும், ஜனவரி மாதம் 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு மலை ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்து சேரும். அதேபோல் அடுத்த நாள் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை ரயில் சென்றடையும்.
சிறப்பு ரயிலில் முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளும் ஒதுக்கப் பட்டுள்ளன. இதை தவிர, இந்த நாட்களில் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
மலை ரயிலில் குறைந்த தூரம் பயணிப்பவர்களுக்கு ஊட்டியில் இருந்து கேத்தி வரை டிசம்பர் 25, 26, 27, 28, 29, 30, 31 மற்றும் ஜனவரி மாதம் 1, 2, 3, 4, 16 ,17, 18, 24, 25, 26 ஆகிய நாட்களில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். இதில், 80 முதல் வகுப்பு மற்றும் 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். காலை 9.45, 11.30 மற்றும் 3 மணிக்கு ஊட்டியில் இருந்து ரயில் புறப்பட்டு கேத்தி சென்றடையும், என்றனர்.