திருமலை நாயக்கர் மகால், விளக்கு தூண், பத்து தூண்

 
சுற்றுலா

மதுரையின் புராதன சின்னங்களில் டிஜிட்டல் ஒளி அலங்காரம் - சுற்றுலாத் துறை புதிய திட்டம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையின் பாரம்பரிய நினைவு புராதனச் சின்னங்களை அடையாளப்படுத்தவும், அவற்றை டிஜிட்டல் ஒளி அலங்காரம் மூலம் காட்சிப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், சுற்றுலாத்துறை திட்டம் தயார் செய்து வருகிறது.

மதுரையை ஆட்சிசெய்த திருமலை நாயக்கர், இந்த நகருக்கு பல்வேறு அடையாளங்களையும், நினைவுச் சின்னங்களையும் விட்டுச் சென்றுள்ளார். அவற்றில் திருமலை நாயக்கர் மகால், வண்டியூர் தெப்பக்குளம், புதுமண்டபம், பத்து தூண், விளக்குதூண் போன்றவை முக்கியமானவை.

இதில் கீழமாசி வீதியும், தெற்கு மாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய இரும்புத் தூண் மீது விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும் இந்த விளக்குதூண், ஜவுளிக் கடைகளுக்கு பெயர் பெற்ற பகுதி. இதுபோல், விளக்குத்தூண் அருகில் வரிசையாக பத்து தூண்கள் அமைந்துள்ளன.

திருமலை நாயக்கர் காலத்தில் இந்த தூண்களில்தான் அரண்மனை யானைகள் கட்டி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற மதுரையின் பராம்பரிய நினைவுச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் அடையாளப்படுத்தவும், அவர்களை கவரவும், டிஜிட்டல் முறையில் ஒளி அலங்காரம் செய்து காட்சிப்படுத்த, மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் சுற்றுலாத்துறை மூலம் திட்டம் தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பத்து தூண், விளக்கு தூண், திருமலை நாயக்கர் மகால், தெப்பக்குளம் போன்ற மதுரையின் அடையாளங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிப்படுத்த புரொஜக்டர் மூலம் டிஜிட்டல் ஒளி அலங்காரம் மேற்கொள்ளலாமா? என்பது குறித்து சுற்றுலாத் துறை ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக, தற்போது மகாலில் தினமும் நடக்கும் ஒளி-ஒலி நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் எந்த வகையில் டிஜிட்டல் ஒளி அலங்காரம் அமைக்கலாம் என ஆய்வு நடக்கிறது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியும் நடக்கிறது’ என்றார்.

SCROLL FOR NEXT