திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் திருக்களார், அக்கரைக்கோட்டகம், புழுதுக்குடி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், திருக்களாரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி டெல்டாவில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
ஓரிரு வாரங்கள் பெய்ய வேண்டிய மழை ஓரிரு மணி நேரங்களில் கொட்டி தீர்க்கிறது. இதனால், 5 லட்சம் ஏக்கருக்கும் மேல்சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை தீவிரமடைந்தால், பேராபத்து ஏற்படும்.
பொன்னுக்கு முன்டானாறு, சாளுவனாறு, வளவனாறு உள்ளிட்ட பாசன வடிகால் ஆறுகளில் ஆகாயத் தாமரை புதர்போல மண்டிக் கிடக்கின்றன. இதனால், மழைநீர் வடியாமல் வயல்வெளிகள் கடல்போல காட்சியளிக்கின்றன. பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளன.
எனவே, தமிழக அரசு உடனடியாக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பிவைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும். பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆகாயத் தாமரை செடிகளை அகற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதில், மாவட்டச் செயலாளர் குடவாசல் சரவணன், கோட்டூர் தெற்கு ஒன்றியத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.