சுற்றுலா

வண்டலூரில் புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிப் பூங்கா திறப்பு - சிறப்பு அம்சங்கள்

இயற்கைச் சூழலுடன் அனுபவம் எப்படி?

பெ.ஜேம்ஸ்குமார்

வண்டலூர்: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், இயற்கைச் சூழல் அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிப் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் முக்கியமான மற்றும் அதிகம் பார்வையிடப்படும் ஈர்ப்புகளில் ஒன்றாக வண்ணத்துப்பூச்சிப் பூங்கா விளங்கி வருகிறது. வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வியல், இனப்பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இப்பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டேரி ஏரிக்கு அருகே 2.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில், வண்ணத்துப்பூச்சிகளின் முழுமையான வாழ்க்கைச் சுழற்சிக்கு தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்கம், உணவூட்டம் மற்றும் வாழிட மேம்பாட்டுக்கு ஏற்ற ஊட்டுத் தாவரத் தோட்டங்களும், வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேன் வழங்கும் மலர்த் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பூங்காவின் முக்கிய ஈர்ப்பாக, கம்பளிப்புழு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள உட்புற வண்ணத்துப்பூச்சி பாதுகாப்புக் கூடம் உள்ளது. இங்கு புழு மற்றும் கூட்டுப்புழு வளர்ப்பு அறைகள், வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி, நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை விளக்கும் மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

புதுப்பிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பாதுகாப்புக் கூடத்தில் புதிய பாலிகார்பனேட் தாள்கள் பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு வண்ணத் தோற்றங்களுடன் ஒளி அமைப்புகள் உருவாக்கப்பட்டு, பார்வையாளர்களின் காட்சியனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த கைப்பிடிக் கம்பிகளுக்கு மாற்றாக மூங்கில் கைப்பிடிகள் பொருத்தப்பட்டு, பூங்காவுக்கு இயற்கையுடன் ஒருங்கிணைந்த தோற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உட்புற பாதுகாப்புக் கூடத்தைச் சுற்றியிருந்த வலைச் சுவர்கள் துருப்பிடிக்காத எஃகு வலைகளால் மாற்றப்பட்டுள்ளன. இதனால் நீடித்த தன்மையுடன் பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நீரூற்றுகள் புதுப்பிக்கப்பட்டு, பூங்காவின் இயற்கைக் காட்சியமைப்பும் நுண்ணிய சுற்றுச்சூழல் நிலையும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

விளக்க மையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட காட்சிப்படுத்தல்கள் மற்றும் சுயக் கற்றல் கியாஸ்க்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் பல்வேறு வண்ணத்துப்பூச்சி இனங்கள், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சி குறித்து அறிந்துகொள்ள முடியும். மேலும், தங்களுக்கான மெய்நிகர் வண்ணத்துப்பூச்சிகளை வடிவமைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பூங்கா முழுவதும் இயற்கை மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை பிரதிபலிக்கும் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் தங்களது அனுபவங்களை புகைப்படமாக பதிவு செய்து பகிரும் வகையில் இரண்டு புதிய புகைப்பட இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிப் பூங்கா மூலம் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பார்வையாளர்களின் நேரடி மற்றும் செயல்வழிப் பங்கேற்பையும் ஊக்குவிக்க பூங்கா நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11.30 மணிக்கு, விடுவிக்கத் தகுந்த கைவளர்ப்பு வண்ணத்துப்பூச்சிகள் கிடைக்கும் நிலையைப் பொறுத்து, வண்ணத்துப்பூச்சி விடுவிப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிப் பூங்காவை கண்டுகளித்து, இந்நிகழ்ச்சியிலும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT