கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பூம்பாறையில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாடு சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில், கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர். பொங்கல் விழாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத் துறை சார்பில் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு வரவேற்பளிக்கபட்டது.
தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில் மண்பானை வைத்து நெருப்பு மூட்டி பொங்கலிட்டனர். தமிழ் கலாச்சாரத்தை போற்றும் வகையில் பறை இசை முழங்கம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரை உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் திரளாக கண்டு ரசித்தனர்.
பறை இசைக்கு ஏற்ப நடன கலைஞர்களுடன் சேர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நடனமாடினர். மேலும் பானை உடைத்தல், கயிறு இழுத்தல், மியூசிக் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதிலும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.