

ஷிவா நடித்த ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டிய கொண்டாட்டமாக இந்த ரிலீஸ் அமைந்துள்ளதாக ஆஹா தமிழ் ஓடிடி தளம் குறிப்பிட்டுள்ளது.
‘சூது கவ்வும் 2’ எப்படி? - நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘சூது கவ்வும் 2’ என்ற பெயரில் உருவானது. மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ரமேஷ் திலக் என பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படம் டிச.13 அன்று திரையரங்குகளில் வெளியானது.
ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரான் (வாகை சந்திரசேகர்) பல ஆண்டுகளுக்குப் பிறகு கோமாவில் இருந்து கண்விழிக்கிறார். எழுந்து பார்த்தவர், ஊழல்வாதியான நபர் (ராதா ரவி) முதலமைச்சர் பதவியில் இருப்பதைக் கண்டு கோபம் அடைகிறார். தனது நேர்மையான சிஷ்யரும் முன்னாள் அமைச்சருமான ஞானோதயம் (எம்.எஸ்.பாஸ்கர்) உதவியுடன் இன்னொரு கட்சி தொடங்கி ராதாரவிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
ஞானோதயத்தின் மகனும் நிதியமைச்சருமான அருமைப் பிரகாசம் (கருணாகரன்) ஆன்லைன் கேம் வழியாக மக்களுக்கு பணம் கொடுப்பதற்கான வழிமுறையை கண்டுபிடித்துள்ளார். அந்த நேரத்தில் அவரிடம் இருந்த பணம் தொடர்பான முக்கியமான டேப்லட் ஒன்று காணாமல் போகிறது. கட்சியில் பணம் இல்லாததால் எம்எல்ஏக்கள் பலரும் அணி தாவுகின்றனர். இதனால் ஆட்சி கவிழ்கிறது.
இன்னொரு பக்கம் தன்னுடைய கற்பனை காதலியில் சாவுக்கு காரணமான அருமைப் பிரகாசத்தை பழிவாங்கத் துடிக்கும் குருநாத் (மிர்ச்சி சிவா). குருநாத் கேங்கை பிடிக்க காத்திருக்கும் போலீஸ் அதிகாரி பிரம்மா (யோக் ஜேப்பி). அருமைப் பிரகாசத்துக்கு தன்னுடைய டேப்லட் கிடைத்ததா? மற்றவர்களுக்கு அவர்களது நோக்கம் நிறைவேறியதா என்பதுதான் ‘சூது கவ்வும் 2’ படத்தின் திரைக்கதை.
முதல் பாகத்துக்கு அருகே கூட நெருங்கவில்லை என்ற விமர்சனத்துக்குள்ள இந்தப் படத்தில், கருணாகரன் கதாபாத்திரம் மட்டும் வெகுவாக வரவேற்பு பெற்றது. அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து என்ற பாசிட்டிவ் விமர்னம் முன்வைக்கப்பட்டது. விடுமுறை தினங்களில் நேரம் கிடைப்போரின் ஓடிடி ரசிகர்கள் ஒரு தரப்பினரின் ரசனைக்கு ‘சூது கவ்வும் 2’ விருந்தாக அமையலாம்.