விளக்குத்தூண் பகுதியில் ஆய்வு செய்த ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா. அருகில் மாநகராட்சி ஆணையர் கவுரவ்குமார்.

 
சுற்றுலா

மதுரையின் ‘சுற்றுலா ஸ்பாட்’ ஆக மாறும் 12 பாரம்பரிய இடங்கள்

கோயில்களை தாண்டி அறியப்படாத இடங்களை அடையாளப்படுத்த திட்டம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் கோயில்களைத் தாண்டி, வரலாற்று சிறப்புமிக்க மற்ற அறியப்படாத இடங்களை அடையாளப்படுத்தி 12 முக்கிய இடங்களை ‘சுற்றுலா ஸ்பாட்’ ஆக மாற்ற சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

நாட்டின் முக்கிய ஆன்மிக வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா நகரான மதுரைக்கு ஆண்டுதோறும் 2.2 கோடி உள் நாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஒரு லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள். தற்போது பாரம்பரிய அசைவ உணவுகள் கிடைக்கும் மாநிலத்தின் உணவு தலைநகராகவும் மதுரை மாறி விட்டது.

விளக்குத்தூண் ஜிகர்தண்டா முதல் பன் புரோட்டா, கறி தோசை வரை உணவு பிரியர்கள் விரும்பி வரக்கூடிய ‘புட் ஸ்பாட்’ ஹோட்டல்கள் ஏராளம் உள்ளன. ஆனால், இங்கு சுற்றுலா வரக்கூடிய பெரும்பாலான மக்கள் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு மட்டுமே வந்து செல்கிறார்கள்.

ஆனால், இவைதவிர மதுரையில் பலரும் அறியாத இயற்கை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவை அறியப்படாத சுற்றுலா தலங்களாகவே உள்ளன.

அவற்றை சுற்றுலாப் பயணிகளிடம் அறிமுகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக, கடந்த வாரம் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையர் கவுரவ் குமார் ஆகியோர் தலைமையில் சுற்றுலாத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, மாநகராட்சி, தொல்லியல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளை உள்ளடக்கிய பாரம்பரிய நடை பயணம் மேற்கொண்டனர்.

இந்த நடைபயணத்தில், திருமலை நாயக்கர் மகால், சேதுபதி மருத்துவமனை (பாண்டியன் கூட்டுறவு அங்காடி), பத்து தூண் சந்து, விளக்குத் தூண், கொத்தவால் சாவடி, கோயில் தேர்கள், எழுகடல் வீதி, புது மண்டபம், விட்டவாசல், நகர மண்டபம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, அழகர்கோவில், திருப்பரங்குன்றம் கோயில் வரும் சுற்றுலாப் பயணிகளை, பக்தர்களை, மதுரையின் 500 ஆண்டுகள் முதல் 1,000 ஆண்டுகள் பழமையான மற்ற இடங்களுக்கும் செல்ல வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக, இந்த பாரம்பரிய நடை பயணத்தில் பங்கேற்ற ஆட்சியர், மாநகரில் உள்ள 12 சுற்றுலா தலங்களையும், சுற்றுலாப்பயணிகள் எளிதாக அறிந்து செல்வதற்காக, அவற்றை அடையாளப்படுத்த மாநகரின் முக்கிய சாலைகளில் டிஜிட்டல் விளம்பர பலகைகளையும், சம்பந்தப்பட்ட சுற்றுலா சிறப்புமிக்க இடங்களில், அவற்றின் வரலாற்று முக்கியத்துவம், சிறப்புகளையும், அவற்றின் கடந்தகால பழைய அரிய வகை புகைப்படங்களையும், தற்போதைய படங்களையும் ஆவணப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் முக்கிய சுற்றுலா ஸ்பாட்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் மாநகரில் உள்ள இந்த 12 சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் வகையில், அங்கு செல்லக்கூடிய சாலைகளையும், பாதைகளையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையாகவும் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்யவும், பாதாள சாக்கடை, தெரு விளக்குகளை மறு சீரமைக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய சுற்றுலா தலங்கள் உள்ள சாலைகளில் நடைபாதை கடைகளை ஒழுங்குபடுத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது என்று கூறினர்.

SCROLL FOR NEXT