சோஹோ ஈஆர்பியை அறிமுகப்படுத்திய சோஹோ நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி தர் வேம்பு. அருகில் சோஹோ பேமண்ட் டெக்னாலஜிஸ் முதன்மை செயல் அலுவலர் சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன்.
கும்பகோணம்: சோஹோ நிறுவனம் சார்பில், சோஹோ ஈஆர்பி என்ற நிறுவன வள திட்டமிடலுக்கான ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருளை அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நேற்று அறிமுகப்படுத்தினார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களின் தற்போதைய நிதி மேலாண்மை அமைப்புகளைத் தாண்டி, அடுத்த நிலைக்கு வளரும்போது, வழக்கமாக மிகவும் சிக்கலானதாகவும், பிற அமைப்புகளுடன் தொடர்பற்றதாகவும், ஆலோசகர்களை அதிகம் சார்ந்தும் இருக்கக்கூடிய பாரம்பரிய ஈஆர்பி தளத்துக்கு மாறுவதில் சிரமங்களை சந்திக்கின்றன.
இதன் விளைவாக, இதை நடைமுறைப்படுத்த நீண்ட காலமாவதுடன், செலவும் அதிகரிக்கிறது. சந்தையில் நீடித்து வரும் இந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காகவே சோஹோ ஈஆர்பி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளில் உள்ள ‘ஆஸ்க் ஜியா’ என்ற குரல்வழி உதவி மூலம் தொழிலதிபர்கள் தங்களது வணிக விவரங்களை எளிதில் பெற முடியும்.
மேலும், ஜிஎஸ்டி இ-இன்வாய்ஸ் விதிமுறைகளுக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்திய சட்ட திட்டங்களுக்கு இணங்குவது எளி தாகிறது. ஐஎப்ஆர்எஸ் 15 மற்றும் ஏஎஸ்சி 606 தரநிலைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணக்கமாக அமையும். ஆழ்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தேவைப்படும் இந்த மென்பொருளானது, கும்பகோணத்தைச் சேர்ந்த திறமையாளர்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள சோஹோ நிறுவனத்தில் 2,000 ஊழியர்கள் பணியாற்றக்கூடிய வளாகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஈஆர்பி மென்பொருளுக்கு மாதாந்திர கட்டண முறையில் செலுத்தினால், ரூ.2,999 என திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.