திருப்பரங்குன்றம் தீபத்தூணில் அணையா தீபம் மனு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் அணையா தீபம் மனு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

புதுடெல்லி / சென்னை: திருப்பரங்குன்றம் மலையை தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் எடுத்து, தீபத் தூணில் அணையா தீபத்தை ஏற்ற கோரும் ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கே.கே. ரமேஷ் சார்பில் வழக்கறிஞர் நரேந்திர குமார் வர்மா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு: கார்த்திகை மாதத்தில் சிவன், திருமால், பிரம்மா அக்னி வடிவத்தில் காட்சி தருவதை விளக்கும் வகையில், 6-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட முருகன் கோயில் அமைந்துள்ள திருபரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது பண்டைய தமிழ் பண்பாட்டின் அங்கமாக உள்ளது.

நூற்றாண்டுகளாக தொடரும் இந்த வழக்கம் குறித்து சங்க இலக்கிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2-ம் உலகப் போரின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக தீபம் ஏற்றுவது தடை செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோயில் தீப மண்டபத்துக்கு எதிரில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தற்போது, மலையிலுள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பக்தர்கள் விடுத்து வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், திருவாரூர் தியாகராஜா கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் படிவிளக்கு உள்ளது. கேரளத்தின் லட்டுமனுர் மகாதேவா கோயில் 450 ஆண்டுகளாக அணையா விளக்கும் ஏற்பட்டுள்ளது.

வீரபாண்டி கவுமாரியம்மன் உள்ளிட்ட தேனி மாவட்டத்திலும், இமாச்சலப்பிரதேசம் ஜாவ்லா தேவி கோயில், அசாமின் ஜோராட்டில் தூர்கா கோயில், மத்திய பிரதேசத்தின் சித்தர கூட்டிலுள்ள அனுமன் கோயில் போன்றவற்றிலும் அணையா விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மலையில் உள்ள தர்கா சுற்றுச்சுவர் அமைந்துள்ள 15 மீட்டருக்கு அப்பால் எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் தூண் தர்காவிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ளது.

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை நினைத்திருந்தால் தீபத்தூணிலேயே தீபத்தை ஏற்றியிருக்க முடியும். முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் நோக்கில், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் தீபம் ஏற்றியது.

தற்போது தீபம் ஏற்றப்படும் இடம் இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படும் இடமாகும். இது ஆகம விதிகளுக்கு எதிரானது. திருப்பரங்குன்றம் மலையில் தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை.

எனவே, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் அணையா தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முருக பக்தர்களை வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அர்விந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சி.ஆர். ஜெயசுகின் ஆஜராகி, மனுதாரர் எந்தவொரு மதத்துக்கும் எதிரானவர் அல்ல என வாதிட்டார். நீதிபதிகள் இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதா என கேட்டனர்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் சார்பில் வழக்கறிஞர் ஜு.பாலாஜி ஆஜராகி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப திருவிழாவின்போது தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த 6-ம் தேதி உறுதி செய்துள்ளது.

இத்தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய எண்ணி வருகிறது என்று வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து தீபத் தூணில் அணையா தீபத்தை ஏற்ற கோரும் ரிட் மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் அணையா தீபம் மனு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள், வீரர்கள் பதிவு முறையில் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in