புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் பாதை மாறியதால் 16 செயற்கைக்கோள்களின் நிலை குறித்து தெரியாத போது ஒரே ஒரு குட்டி செயற்கைக்கோள் மட்டும் விண்ணில் உயிர்ப் பிழைத்து தகவல்களை அனுப்பி உள்ளது. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), கடந்த திங்கட்கிழமை 12-ம் தேதி பிஎஸ்எல்வி சி-62 என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இது 44.4 மீட்டர் உயரத்துடன் 4 நிலைகளை கொண்டது. இது 2026-ம் ஆண்டின் முதல் ஏவுதலாக இருந்தது.
இந்த ராக்கெட் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இஓஎஸ் - என்1 என்ற அதிநவீன செயற்கைக்கோள் மற்றும் மொரீசியஸ், நேபாளம், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளின் செயற்கைக் கோள்கள் என மொத்தம் 16 செயற்கைக் கோள்களை சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து காலை 10.17 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. ஆனால், பிஎஸ்எல்வி சி - 62 ராக்கெட் விண்ணில் செல்லும் போது 3-வது கட்டத்தில் பாதை விலகியது. இது இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பான தரவுகளை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
ஆனால், ராக்கெட்டில் அனுப்பிய 16 செயற்கைக்கோள்களின் நிலை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் அவை அனைத்தையும் விண்வெளியில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனதாக கருதப்பட்டது. இந்நிலையில், ஸ்பெயினைச் சேர்ந்த 25 கிலோ எடை கொண்ட ஒரு குட்டி செயற்கைக்கோள் மட்டும் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென தகவல்களை அனுப்பி உள்ளது. இத்தகவலை அந்த செயற்கைக்கோளை அனுப்பிய ஸ்டார்ட் அப் நிறுவனமான ஆர்பிட்டல் பாராடிம் (Orbital Paradigm) என்ற நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த நிறுவனம் ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ அல்லது கிட் (KID) என்ற செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் அனுப்பியது. அதில் சென்ற அனைத்தும் செயலிழந்த நிலையில், கிட் மட்டும் விண்ணில் கடுமையான சூழ்நிலைகளை தாங்கி, பூமிக்கு முக்கிய தகவல்களை அனுப்பியுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராக்கெட் 3-வது நிலையில் பாதை விலகினாலும், 4-வது நிலையில் கிட் மட்டும் தனியாகப் பிரிந்து இயங்க தொடங்கி உள்ளது என்று ஆர்பிட்டல் பாராடிம் நிறுவனம் கூறியுள்ளது. இதற்கிடையில் தென் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக விழும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த இந்த கிட் செயற்கைக்கோள், விண்ணில் கடுமையான அழுத்தங்கள் வெப்பத்தை தாங்கி செயல்பட்டது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.