தொழில்நுட்பம்

அல்காரித ‘அலர்ட்’ - சமூக ஊடகத்தை ஆரோக்கியமாக பயன்படுத்துவது எப்படி?

ஜூன் 30 - சமூக ஊடக நாள்

உதயசங்கரன் பாடகலிங்கம்

சமூக ஊடகங்கள் இல்லாமல் எந்த ஒரு மனிதரும் ஒரு நாளைக் கடக்க முடியாது எனும் இன்றைய சூழலில், அவற்றை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவது எப்படி?

உலகில் ஏறக்குறைய 70% பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். 2016இல் 246 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, பத்தாண்டுகளில் 579 கோடியாக உயர்ந்திருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்துவோரில் 94.7 சமூக ஊடகங்களில் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் 21 நிமிடங்களைச் சமூக ஊடகங்களில் செலவிடுகின்றனர்.

2025 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் 49.1 கோடிப் பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். 2029இல் இந்த எண்ணிக்கை 130 கோடியாகி, தற்போது முதலிடத்தில் இருக்கும் சீனாவைத் தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பயனர்கள் ஏறக்குறைய இரண்டரை மணி நேரத்தைச் சமூக ஊடகங்களில் செலவழிப்பதாகவும், அவர்களில் 40% பேர் ஜென்ஸீ தலை முறையினர் என்றும் தெரிய வந்திருக்கிறது.

கட்டுப்பாடு தேவை

‘சோஷியல் மீடியா அக்கவுண்ட் இருந்தாதான் கெத்து’ என்கிற எண்ணமே பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. எல்லாத் தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் போலத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தினால் போதும் என்கிற புரிதல் மிகச் சிலரிடமே உள்ளது.

அதனால், பெரும்பாலா னோர் நாளும் பொழுதும் சமூக ஊடகத் தளங்களில் அதிக அளவில் ஈடுபடுத்திக்கொள்வது அவர்களின் ஆரோக்கியத்துக்கும் எதிர்காலத் துக்கும் நல்லது அல்ல.

எப்படிப் பயன்படுத்துவது?

எல்லாக் கண்டுபிடிப்பு களையும் போலவே, சமூக ஊடகங்களையும் அளவாகப் பயன்படுத்தினால் யாருக்கும் பிரச்சினை இல்லை. அதற்கு, நேரக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது அவசியம். மாணவர்களுக்கான பயன்பாட்டு நேரத்தைப் பெற்றோரோ, வழிகாட்டிகளோ நிர்ணயிக்கலாம்.

சிலர் அந்தந்தக் கணங்களில் தங்களது இருப்பைச் சமூக ஊடகத்தில் பதிவு செய்தபடி இருப் பார்கள். இவ்வாறு சுயவிவரங்கள், ஒளிப்படங்கள், தற்போதைய செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைத் தொடர்ச்சி யாகச் சமூக ஊடகங்களில் வெளியிடுவது தேவையற்றது.

இணைய உலகில் உருவாக்கிய அல்லது உருவான பிம்பத்தைவிட, நம்முடன் உறவாடுபவர்கள், நட்புப்பாராட்டுபவர்களை நேரில் சந்தித்துப்பேசுவது நல்லது. அதைவிடுத்து வாழ்க்கையைச் சமூக ஊடகங்களில் வாழ முற்படுவது, கூட்டத்தில் இருப்போரையும்கூடத் தனியாளாக ஆக்கிவிடும்.

மாணவர் விழிப்புணர்வு

தொலைதூரத்தில் இருப்போரை எளிதாகத் தொடர்புகொள்வது, சந்தைப்படுத்துதல் / விற்பனை / விளம்பர உத்திகளைப் பரவலாகச் செயல் படுத்துவது, தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துவது, சமூகமாகக் கட்டமைவது, திறன்களை வெளிப்படுத்துவது எனப் பல நன்மைகள் சமூக ஊடகங்களால் நிகழ்கின்றன.

தனிப்பட்ட அடையாளத்தைத் தந்து, பலரோடு இணைப்பை ஏற்படுத்தி, சமூக ஆதரவைத் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. அதனை எதிர்மறையாகப் பயன்படுத்தும்போது மட்டுமே அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கின்றன.

சமூக ஊடகங்களில் எதனைத்தேடுகிறோமோ, அந்த நுட்பத்தை வைத்துக்கொண்டு நமது எதிர்காலத் தேர்வுகளை வடிவமைக்கிற வேலையைச் சமூக ஊடகங்களின் ‘அல்காரிதம்’ தீர்மானிக்கிறது. ‘நான் யார்’ என்று அவரவர் முடிவு செய்வதற்குப் பதிலாக, ‘நீ இப்படித்தான்’ என்று ஒவ்வொருவர் மீதும் முத்திரை குத்தும் முயற்சிகளே இவை.

ஒவ்வொரு நாளும் இத்தனை நிமிடங்கள் மட்டும் சமூக ஊடகத்தில் செலவழித்தால் போதும் என்கிற தெளிவு இருந்துவிட்டால், சமூக ஊடகங்கள் நம் கைகளுக்குள் கட்டுப்பட்டிருக்கும்.

நம்மிடத்தில் எந்தவிதப் பார்வையையும் முன்வைக்காமல், எந்தவித மிரட்டலுக்கும் ஆளாக்காமல், தேவையான தகவல்களைப் பெறுகிற, ஆரோக்கியமான இணையப் பந்தத்தை உருவாக்குகிற தொழில் நுட்பமாகத் திகழும். அதன் வழியே சிறப்பான உடல், மன வளத்தைப் பராமரிக்கிற சூழல் உருவாகும்!

SCROLL FOR NEXT