தொழில்நுட்பம்

கல்வியில் சமூக ஊடகங்களின் பங்கு

ஜூன் 30 - சமூக ஊடக நாள்

ராகா

சமூக ஊடகங்கள் மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும் கருவியல்ல. சரியாகப் பயன்படுத்தினால் கல்வி, திறன் மேம்பாடு, தொழில் வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை எளிதாக அறிந்துகொள்ள உதவும் பயனுள்ள தளமாகவும் மாறும். என்கிற போதும், அதன் பயன்பாட்டில் கட்டுப்பாடும் சரியான தேர்வும் அவசியம்.

* ஒருவர் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் எதைப் பார்க்க வேண்டும் என நிர்ணயிப்பது ‘அல்காரிதம்’. எனவே, கல்வி சார்ந்த உள்ளடக்கங்கள் அதிகம் தோன்றும் வகையில் உங்கள் ‘ஃபீட்' அமைப்பை மாற்றுங்கள்.

* தேர்வு, கல்வி உதவித்தொகை, பணியிடப் பயிற்சி தொடர்பான அறிவிப்புகள், கல்வி நிலையங்கள், நிறுவனங்களின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துகொள்ளப்படும். இதனால் கல்வி நிறுவனங்கள், துறைசார் நிபுணர்களின் அதிகாரபூர்வ பக்கங்களையே பின்தொடருங்கள்.

* பாடங்களைப் படிக்கும் நேரம் போக ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறோம். இதிலும் கல்வி கற்க வேண்டுமே என நினைக்கிறீர்களா? அந்த எண்ணம் எழுவது இயல்புதான். ஆனால், சில மணி நேர ஓய்வு உங்களைப் பல மணி நேரம் கட்டிப்போட விடாமல் கவனமாக இருந்தால் நல்லது.

* ஒரே பாடத்தைப் படிக்கும் மாணவர்கள், நண்பர்களோடு சேர்ந்து சமூக ஊடகங்களில் படிப்புக் குழுக்களை உருவாக்கி, தங்களது சந்தேகங்களைப் பகிர்ந்து கொண்டு அது பற்றி விவாதிக்கலாம்.

* யூடியூப் போன்ற தளங்களில் பாடம், ஆவணப்படம், கல்வி பாட்காஸ்ட்களைப் பின்தொடரலாம். ஓய்வு நேரத்தின்போது அவற்றைக் கேட்கலாம், பார்க்கலாம்.

* பொதுஅறிவு விநாடி-வினா, புதிர், திறன் மேம்பாட்டுக் குழுக்களில் இணைந்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

SCROLL FOR NEXT