தொழில்நுட்பம்

மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடக்கம் - உலக அளவில் பயனர்கள் பாதிப்பு

வேட்டையன்

வாஷிங்டன்: இந்தியா உட்பட உலக அளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட சேவைகள் முடங்கி உள்ளன. இதன் காரணமாக பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மென்பொருள் சேவை நிறுவனங்களில் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாஃப்ட். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் முக்கிய சேவைகள் முடங்கி உள்ளன.

இணையதள சேவைகள் பாதிப்பு குறித்த தகவலை அறிய உதவும் டவுன் டிடெக்டர் தளத்தில் மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம் குறித்து பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதில் மின்னஞ்சல் சேவை வழங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், மைக்ரோசாஃப்ட் 365, டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் ஸ்டோர், ஏஐ சேவைகளை வழங்கும் கோபைலட் உள்ளிட்ட சேவைகளை இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் பயனர்களால் பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாஃப்ட் தரப்பு விளக்கம்

பாதிக்கப்பட்ட சேவைகளை மீட்டமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வர் பாதிப்பு காரணமாக சேவைகள் முடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

ஒரே நேரத்தில் அதிகப்படியான லோட் (பயன்பாடு) காரணமாகவும், தானியங்கு சோதனையின் போது ஏற்பட்ட சிக்கலால் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில் தங்கள் வல்லுநர் குழு செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT