செய்யறிவு மாதிரிகளை உருவாக்குவதற்கு நிரலாக்க அறிவு அவசியம் என நினைக்கிறீர்களா? ஒரு வரி நிரல்கூட எழுதாமல் நமக்கென ஓர் இயந்திரக்கற்றல் மாதிரியை உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கு கூகுள் உருவாக்கிய ‘Teachable Machine’ என்கிற கட்டணமில்லா இணையவழிக் கருவி துணைபுரிகிறது.
இணைய உலாவியிலேயே (Web Browser) செயல்படும் இந்தக் கருவி, TensorFlow, பரிமாற்றக் கற்றல் (Transfer Learning) நுட்பங்களைப் பயன்படுத்திப் படங்கள், ஒலிகள், உடல் தோரணையை அடையாளம் காணும் மாதிரிகளை எளிதாக உருவாக்கப் பயனர்களுக்கு உதவுகிறது.
படங்களை அடையாளம் காணுதல் (Image Project)
கணினியில் இருக்கும் கேமராவையோ ஏற்கெனவே எடுக்கப்பட்ட புகைப்படங்களையோ பயன்படுத்தி வெவ்வேறு பொருள்களை அடையாளம் காணும் மாதிரியை உருவாக்கலாம். உதாரணமாகப் பழுத்த, பழுக்காத வாழைப்பழங்களின் படங்களை வழங்கி, அவற்றை வேறுபடுத்திக் கண்டறிவதற்கான பயிற்சியைக் கணினிக்கு அளிக்கலாம்.
ஒலிகளை வகைப்படுத்துதல் (Audio Project)
மைக்ரோஃபோன் மூலம் கைதட்டல், விசில், இரைச்சல் போன்ற ஒலிகளைப் பதிவுசெய்து, அவற்றை அடையாளம் காணும் மாதிரிகளை உருவாக்கலாம். இதன்மூலம் ஒலி அடிப்படையில் இயங்கும் எளிய செயலிகளை வடிவமைக்க முடியும்.
உடல் தோரணைகளைக் கண்டறிதல் (Pose Project)
கேமரா முன் நின்று கைகளை உயர்த்துவது, நேராக நிற்பது போன்ற உடல் தோரணைகளைக் காட்டி, செய்யறிவு மாதிரிக்குப் பயிற்சி அளிக்கலாம். இந்த முறையைப் பயன்படுத்தி உடல் அசைவுகளால் கட்டுப்படுத்தப்படும் விளையாட்டுகளைக்கூட உருவாக்க முடியும்.
எளிய படிநிலைகளில் செய்யறிவு மாதிரி
இந்தக் கருவி கீழ்க்கண்ட படிநிலைகளில் செயல்பட்டு மாதிரிகளைப் பயனர்களுக்கு வழங்குகிறது.
Gather (தரவு சேகரிப்பு): முதலில் அடையாளம் காணவேண்டிய படங்கள், ஒலிகள், உடல் தோரணைகளின் எடுத்துக்காட்டுத் தரவுகளைச் சேகரித்து, தனித்தனி வகைகளாகப் பிரித்தல்.
Train (மாதிரிக்குப் பயிற்சி அளிப்பது): அந்தத் தரவுகளைக் கொண்டு மாதிரிக்குப் பயிற்சி அளித்தல். பிறகு, பயிற்சி முடிந்ததும் புதிய தரவுகளை வழங்கி அதன் செயல்பாட்டைச் சோதித்தல்.
Export (மாதிரியைப் பயன்படுத்துவது): உருவாக்கப்பட்ட மாதிரியைப் பதிவிறக்கம் செய்தோ, இணையத்தில் பதிவேற்றம் செய்தோ பயன்படுத்துதல்.
தனியுரிமையும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பும்
வெப்கேம், மைக்ரோஃபோன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் புற சேவையகங்களுக்குச் செல்லாமல், இணைய உலாவியிலேயே பயிற்சியை மேற்கொள்ள முடியும். ஆயினும், கூகுள் டிரைவில் சேமிக்கும்போதோ மாதிரியை இணையத்தில் பதிவேற்றும்போதோ தொடர்புடைய தரவுகள் சேவையகங்களுக்குச் செல்லக்கூடும்.
உருவாக்கப்பட்ட மாதிரிகளை TensorFlow.js, p5.js, Node.js போன்ற மென்பொருள் தொழில்நுட்பங்களுடனும், Arduino, Google Coral போன்ற வன்பொருள் சார்ந்த தளங்களுடனும் இணைத்துப் பயன்படுத்த முடியும்.
திட்டங்களைச் சேமித்தல்
உருவாக்கப்படும் திட்டங்களை கூகுள் டிரைவ் அல்லது சொந்தக் கணினியில் சேமித்து வைக்கலாம். பின்னர் அவற்றை மீண்டும் திறந்து பயிற்சித் தரவுகளை மாற்றவும், புதிய வகைகளைச் சேர்க்கவும், மாதிரியை மறுபயிற்சி செய்யவும் முடியும். இதன் வழியே ஏற்கெனவே உருவாக்கிய திட்டத்தைத் தொடர்ந்து மேம்படுத்த முடிகிறது.
பிற கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
பைத்தன் போன்ற வழக்கமான மென்பொருள்களுடன் ஒப்பிடும்போது, Teachable Machine கருவியால் நிரலாக்கமின்றி செய்யறிவு மாதிரிகளை உருவாக்க முடிகிறது. இருப்பினும், சிக்கலான ஆய்வுகளுக்கும், பெரிய தரவுத்தொகுப்புகளுக்கும் இதைவிட மேம்பட்ட கருவிகள் தேவை என்பதை ஞாபகத்தில் கொள்வது அவசியம்.
யாருக்குப் பயன்படும்?
மாணவர்கள், ஆசிரியர்கள், செய்யறிவுத் தொழில்நுட்பத்தைப் புதிதாகக் கற்பவர்களுக்கு இது பயனுள்ள கருவியாக இருக்கும். குறிப்பாக, வகுப்பறையில் இயந்திரக்கற்றலைச் செயல்வழியில் கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு இந்தக் கருவி உற்ற துணைவனாக விளங்குகிறது.
செய்யறிவு எப்படிக் கற்றுக்கொள்கிறது? எவ்வாறு செயல்படுகிறது? என்பதை அறிய விரும்புவோருக்கு Teachable Machine நல்லதொரு தொடக்கமாக இருக்கும். இணையத்தளம்: https://teachablemachine.withgoogle.com/
செய்யறிவு விதி: ரகசிய கடவுச்சொற்களையும், API விசைகளையும் (API Keys) செய்யறிவுத் தளங்களில் பதிவேற்றுவதைத் தவிருங்கள். ரகசியக் கோப்புகளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். மாறாக, இவற்றில் அலட்சியம் காட்டினால் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள். செய்யறிவு உலகில் கவனம் மட்டுமே உங்களைக் காக்கும்.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.