வீடுகளையும் புதிய அறைகளையும் வடிவமைக்கும்போது எந்தப் பொருளை எங்கு வைப்பது, அது அறையுடன் சரியாகப் பொருந்துமா, அறையின் அளவுக்கும் வண்ணத்துக்கும் ஏற்ற அறைக்கலன்கள் யாவை என்பதையெல்லாம் கண்டறிவது அனைவருக்கும் எளிதல்ல. இந்தச் சிரமத்தைப் போக்கி, திறன்பேசி மூலமாகவே முப்பரிமான (3D) முறையில் மிக எளிதாக வீட்டு உள் அலங்காரத்தை வடிவமைக்க உதவும் அதிநவீனச் செய்யறிவுத் தளம்தான் - IKEA Kreativ.
கணினிப் பார்வை (Computer Vision), இயந்திரக் கற்றல், இடம் சார்ந்த கணினி (Spatial Computing) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மெய்நிகர் முறையில் (Virtual Interior Design) அறைகளை வடிவமைக்க இத்தளம் உதவுகிறது.
அறையை ஸ்கேன் செய்து, தேவையற்றவற்றை அழிப்பது (Scene Scanner & Auto-Erase)
செய்யறிவு ஸ்கேனர்தான் IKEA Kreativ தளத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். பயனர்கள் தங்கள் திறன்பேசி கேமரா மூலம் அறையைப் படம் பிடிக்கும்போது, அது அந்த அறையின் முப்பரிமாண அளவுகளையும் மூலைகளையும் துல்லியமாகக் கணக்கிட்டுவிடுகிறது. பின்னர், அதிலுள்ள ‘Auto-Erase’ அம்சம் அறையில் இருக்கும் பழைய அறைக்கலன்களை நீக்கி, வெறும் அறையை மட்டும் பயனருக்குக் காட்டி அசத்துகிறது.
மெய்நிகர் அறைக்கலன் பொருத்தம் (3D Spatial Placement)
இக்கருவி வழங்கும் ஆயிரக்கணக்கான சோபாக்கள், மேசைகள், விளக்குகள் போன்ற அறைக்கலன் மாதிரிகளை அந்த அறைக்குள் நேரடியாகப் பொருத்திப் பார்க்கவும் முடியும். அறையின் அளவுக்கும் வெளிச்சத்துக்கும் (Scale & Lighting) ஏற்ப அப்பொருள்கள் சரியாகப் பொருந்துகின்றனவா என்பதைக் காணவும் இந்தத் தளத்தில் வசதியுள்ளது.
இயற்கையான வெளிச்சத்துக்கும் செயற்கை விளக்கு வெளிச்சத்துக்கும் ஏற்ப அறைக்கலன்களின் நிழல்களும் (Shadows) பிரதிபலிப்புகளும் எவ்வாறு இருக்கும் என்பதைப் படம்பிடித்துக் காட்டும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. இயந்திரக் கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, பயனர்கள் தேர்ந்தெடுக்கும் அறைக்கலன்களுக்கு ஏற்ற பிற அலங்காரப் பொருள்களையும் திரைச்சீலைகளையும் வண்ணச் சேர்க்கைகளையும் (Color & Style Combinations) இத்தளம் பரிந்துரைக்கிறது.
3D ஷோரூம்கள் (3D Showrooms)
தங்களது அறையை ஸ்கேன் செய்ய விரும்பாதவர்கள், இத்தளத்தில் ஆயத்த நிலையில் உள்ள நூற்றுக்கணக்கான 3D மாதிரிகளில் (Interactive 3D) ஒன்றைத் தேர்வு செய்து, தங்கள் விருப்பத்துக்கு ஏற்பப் பொருள்களை மாற்றி அறையை வடிவமைத்துப் பார்க்க முடியும். அறையில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து IKEA பொருள்களின் விலைப்பட்டியலை உடனே பெறும் வசதியும் இதில் உள்ளது.
வடிவமைப்புகளைச் சேமித்துப் பகிர்தல் (Save & Share Designs)
பயனர்கள் தாங்கள் உருவாக்கிய 3D வடிவமைப்பு மாதிரிகளைச் சேமித்து வைக்கவும், குடும்ப உறுப்பினர்களுடனும் உள்ளரங்க வடிவமைப்பாளர்களுடனும் எளிதாகப் பகிர்ந்துகொள்ளவும், அவர்களிடம் இருந்து கருத்துகளைப் பெறவும் இதில் வசதி உண்டு.
பிற வடிவமைப்புக் கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
Traditional 2D Planners / Catalogs, வடிவமைப்புகளை வெறும் படங்களாக மட்டுமே பயனருக்குக் காட்டுகின்றன. குறிப்பிட்ட ஓர் அறையின் பரிமாணத்துக்கு ஏற்பப் பொருள்களை வைத்தும், மாற்றியும் பார்க்கும் வசதி அவற்றில் இருப்பதில்லை. IKEA Kreativ கருவியில் அறையை 3D மேப்பிங் செய்ய முடியும் என்பதுடன் பழைய பொருள்களை நீக்கி, புதிய பொருள்களை எளிதாகவும், துல்லியமாகவும் பொருத்திப் பார்க்க இயலும்.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
புதிதாக வீடு கட்டுவோர், வீட்டை மறுசீரமைப்போர், உள்ளரங்க வடிவமைப்பாளர்கள். IKEA Kreativ கருவி செய்யறிவுத் தொழில்நுட்பத்தின் துணையுடன் அறைகளின் உள் அலங்காரத்தை வடிவமைக்கும் அனுபவத்தை எளிதாகவும் சுவாரசியமானதாகவும் மாற்றுகிறது.
https://www.ikea.com/in/en/planners/
செய்யறிவு விதி: செய்யறிவு உங்கள் சிந்தனையைப் பதிலீடு செய்வதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களுடைய சுயசிந்தனையை மேம்படுத்துவதற்கு மட்டுமே நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டும். ஆகவே மூலச்சிந்தனை எப்போதும் உங்களுடையதாகவே இருக்கட்டும்.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர்,
தொழில்நுட்ப எழுத்தாளர்.