தரவு அறிவியல், இயந்திரக் கற்றல் சார்ந்த செய்யறிவு மாதிரிகளை உருவாக்குவதற்கு உயர்திறன் கொண்ட கணினி வன்பொருள்களும் GPU அமைப்புகளும் தேவை. அப்படியான விலையுயர்ந்த கணினிகள் இல்லாதவர்களும் செய்யறிவுத்துறையில் பணிகளை மேற்கொள்ள Google Colab (Colaboratory) உதவுகிறது.
வலை உலாவியின் (Browser) துணையுடன் பைதன் குறியீடுகளை எழுதவும் அவற்றை மேகக்கணினியகங்களில் (Cloud) இயக்கிப் பார்க்கவும் இத்தளம் வழிவகை செய்கிறது.
கட்டணமில்லா வன்பொருட்கள் (Free GPU & TPU Access)
Nvidia GPU (T4, V100), Google TPU (Tensor Processing Unit) போன்றவற்றை இலவசமாக வழங்குவதே கூகுள் கொலாப் தளத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம்.
இதன் மூலம் சிக்கலான நரம்பியல் வலைப்பின்னல்களையும் (Neural Networks), ஆழ்கற்றல் மாதிரிகளையும் (Deep Learning Models) சாதாரண மடிக்கணினியிலேயே வேகமாகப் பயிற்றுவிக்க முடியும்.
நிறுவல் இல்லாத உலாவிச் சூழல் (Zero Configuration Needed)
கணினியில் பைதன் மென்பொருளையோ, Pandas, NumPy, Scikit-Learn, PyTorch, TensorFlow போன்ற சிக்கலான குறியீட்டுத் தொகுப்புகளையோ நிறுவத் தேவையில்லை. பிரபலமான தரவு அறிவியல் தொகுப்புகள் பலவும் இத்தளத்தில் முன்கூட்டியே நிறுவப்பட்டுத் தயார் நிலையில் இருப்பதால், அவற்றை அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம்.
கூகுள் டிரைவ் ஒருங்கிணைப்பு, நேரலைப் பகிர்வு (Google Drive Integration & Real-time Collaboration)
கொலாப் கோப்புகள் (.ipynb / Jupyter Notebook Format) நேரடியாக கூகுள் டிரைவில் சேமிக்கப்படுகின்றன. இதனால் பெரிய அளவிலான தரவுத்தொகுப்புகளை (Datasets) எளிதாகப் பதிவேற்றவும் எந்தவொரு கணினியில் இருந்தும் அவற்றைத் தடையின்றிப் பயன்படுத்தவும் முடியும்.
கூகுள் டாக்ஸ் (Google Docs) போலவே கொலாப் நோட்புக்குகளையும் சக மாணவர்களுடனோ ஆராய்ச்சியாளர்களுடனோ பகிர்ந்துகொண்டு இணைந்து பணியாற்றலாம். பயனர்கள் தங்களுடைய கருத்துகளைச் (Comments) சேர்க்கும் வசதியும் இதிலுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட செய்யறிவுக் குறியீட்டு உதவி (Integrated AI Coding Assistant)
கூகுளின் செய்யறிவுத் தளமான ஜெமினியின் உதவியை இந்தக் கருவியில் இருந்தே பெறும் வசதியுள்ளது. ஆகவே, பயனாளர்களால் எளிதில் குறியீடுகளை உருவாக்கவும் பூர்த்தி செய்யவும் (Code Completion) பிழைகளைத் திருத்தவும் (Debugging) முடிகிறது.
ஹிட்ஹப் நேரடி ஒருங்கிணைப்பு (GitHub Integration)
ஆராய்ச்சியாளர்கள் தங்கள் குறியீடுகளை நேரடியாக ஹிட்ஹப் (GitHub Repository) தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து இயக்கவும், புதிய ஆய்வறிக்கைகளின் மாதிரிகளைத் தடையின்றிச் சேமித்து வெளியிடவும் இக்கருவி அனுமதிக்கிறது.
பிற கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
Local Jupyter Notebook / VS Code போன்ற தளங்கள் நம்முடைய கணினியில் இருக்கும் வன்பொருளைச் (Local Hardware) சார்ந்தே இயங்குகின்றன. ஆகவே மேம்பட்ட GPU வசதிகளைப் பெறவேண்டுமெனில் அதற்கு அதிக அளவில் பணத்தைச் செலவிட வேண்டியதிருக்கும். Google Colab கருவியிலோ சக்திவாய்ந்த GPU வசதிகளுடன், தானியங்கு செய்யறிவு வழிகாட்டலையும் மேகக்கணினியகத்திலிருந்து நாம் இலவசமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
தரவு அறிவியல் மாணவர்கள், செய்யறிவு ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆழ்கற்றல் மாதிரிகளைப் பயிற்றுவிப்போர்.
ஆராய்ச்சி பணிகளிலும் கல்விப்புலத்திலும் நிலவும் வன்பொருள் சார்ந்த சவால்களை முறியடித்து, செய்யறிவுக் கற்றலை அனைவருக்குமான ஒன்றாக மாற்றுவதில் Google Colab கருவியின் பங்கு இன்றியமையாதது.
https://colab.research.google.com/
செய்யறிவு விதி: செய்யறிவு தரும் குறியீட்டை அப்படியே நகலெடுக்காமல் அவற்றின் பின்னுள்ள தர்க்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அல்காரிதம் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கற்றுக்கொள்வது முக்கியம். லாஜிக் புரிந்தால்தான் நீங்கள் திறன்மிக்க புரோகிராமர் ஆக முடியும்.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர்,
தொழில்நுட்ப எழுத்தாளர்.