நிறுவனங்களில் திட்ட மேலாண்மை (Project Management), குழு ஒருங்கிணைப்பு, ஆவணப் பராமரிப்பு உள்ளிட்ட அன்றாட அலுவலகச் செயல்பாடுகளை ஒரே இடத்தில் நிர்வகிக்க ‘ClickUp Brain’ உதவுகிறது. நிறுவனத்தின் திட்டங்கள், ஆவணங்கள், உரையாடல்கள், பணியாளர்கள் தொடர்பான அனைத்துத் தரவுகளையும் இணைத்துச் செயல்படும் ஆழ்கற்றல் அமைப்பாக இது திகழ்கிறது.
மூன்று முக்கிய வசதிகள்: ClickUp Brain செயலி, நிறுவனங்களின் ஒட்டுமொத்த பணிகளையும் மூன்று வழிகளில் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது.
AI Knowledge Manager: நிறுவனத்தின் ஆவணங்கள், தரவுத்தளங்கள், கொள்கைகளில் உள்ள எந்தவொரு கேள்விக்கும் நொடிகளில் துல்லியமான ஆதாரங்களுடன் விடை தேடித் தருகிறது. உதாரணம், ‘நிறுவனத்தின் விடுப்புக் கொள்கை என்ன?’ அல்லது ‘கடந்த மாத விற்பனை அறிக்கை எங்கே?’
AI Project Writer: மின்னஞ்சல்கள், திட்ட முன்மொழிவுகள், பிழைதிருத்த அறிக்கைகள் (Bug Reports), வாடிக்கையாளர் தொடர்பான பிழையற்ற ஆவணங்கள் ஆகியவற்றைத் தயாரித்துத் தருகிறது.
AI Project Manager: திட்டங்களின் தற்போதைய நிலையைத் (Status Updates) தானாகக் கண்காணித்து, தாமதமாகும் பணிகளைச் சுட்டிக்காட்டுவதுடன், வாராந்திர, மாதாந்திர அறிக்கைகளை உருவாக்குகிறது.
உரையாடல்கள் முதல் பணி உருவாக்கம் வரை (Task & Workflow Automation):
குழு உறுப்பினர்களிடையே நடக்கும் நீண்ட விவாதங்கள் (Comment Threads), நேரலைக் கூட்டங்களின் பதிவுகளை (Meeting Transcripts) இது சுருக்கி அளிக்கிறது. அதுமட்டுமன்றி, அந்த விவாதங்களில் இருந்து அடுத்தகட்ட வேலைகளைத் (Action Items) தானாகவே கண்டறிந்து, புதிய பட்டியலாக (Tasks & Subtasks) மாற்றி, அதற்குரிய பொறுப்பாளர்களை நியமித்து காலக்கெடுவையும் (Deadlines) நிர்ணயிக்கிறது.
குரல் பதிவும் நேரலை மொழிபெயர்ப்பும் (Voice Clips & Translation): குரல் பதிவுகளைப் (Voice Clips) பதிவேற்றினால், அதை உடனுக்குடன் உரையாக மாற்றித் தருகிறது. மேலும், நிறுவனத்தில் உள்ள பன்னாட்டு ஊழியர்களின் தடையற்ற தொடர்பாடலை உறுதிப்படுத்தும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் அதை மொழிபெயர்க்கவும் செய்கிறது.
தானியங்கு பணி மேலாண்மை (Smart Workload Management): பணியாளர்களின் தற்போதைய பணிச்சுமையையும் (Workload) திட்டங்களின் காலக்கெடுவையும் பகுப்பாய்வு செய்து, புதிய பணிகளை யாருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை இந்தக் கருவி தானாகவே பரிந்துரைக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட சில பணியாளர்களுக்கு மட்டும் அதிகப் பணிச்சுமை ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
சூழல் சார்ந்த அறிவாண்மை (Contextual Intelligence): வழக்கமான செய்யறிவுக் கருவிகளைப் போலப் பொதுவான பதில்களை வழங்காமல், உங்கள் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஆவணங்கள், காலக்கெடு, குழு உறுப்பினர்களின் பணிநிலையை முழுமையாக உள்வாங்கி, அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் மிகச் சரியான தீர்வுகளை வழங்குவது இதன் தனிச்சிறப்பாகும்.
பிற செய்யறிவுக் கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
ChatGPT போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, தரவுகளைத் தனித்தனியாக நகலெடுத்து ஒட்ட (Copy-Paste) வேண்டியதிருக்கும். நிறுவனத்தின் தனிப்பட்ட சூழலுக்கு ஏற்ற தளமாகவும் அவை இருப்பதில்லை. மாறாக, ClickUp Brain செயலியைத் திட்ட மேலாண்மை அமைப்புடன் நேரடியாக ஒருங்கிணைக்க இயலும் என்பதால், வேறெந்தத் தளத்துக்கும் செல்ல வேண்டிய அவசியமின்றி நிறுவனத்தின் அனைத்துப் பணிகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ள முடிகிறது.
மேலும், தகவல் பரிமாற்றம் சிக்கல் இல்லாமல், பாதுகாப்பான முறையில் நிகழ்வதையும் இந்தக் கருவி உறுதிசெய்கிறது. அலுவலகப் பணிகளில் நேரம் வீணாவதைக் குறைத்து, குழுக்களின் உற்பத்தித்திறனைப் பல மடங்கு உயர்த்துவதற்கு ClickUp Brain பெரிதும் உதவுகிறது.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
திட்ட மேலாளர்கள் (Project Managers), மென்பொருள் உருவாக்கக் குழுக்கள் (Software Teams), மனிதவள மேலாளர்கள் (HR), சிறு, பெருநிறுவனங்கள்.
செய்யறிவு விதி: செய்யறிவு தரும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். முக்கியமான தகவல்களை நம்பகமான மூலங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். செய்யறிவு உலகில் எப்போதுமே விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர்,
தொழில்நுட்ப எழுத்தாளர்.