செய்யறிவுக் கருவிகள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து விரைவாகப் பதில்களை வழங்கினாலும், வங்கிக்கணக்கு விவரங்கள், நிறுவனத்தின் ரகசிய அறிக்கைகள், தனிப்பட்ட மருத்துவ ஆவணங்கள், காப்புரிமை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை இணையத்தில் இயங்கும் பொதுவான செய்யறிவுத் தளங்களில் பதிவேற்றும்போது தரவுப் பாதுகாப்பு (Data Privacy & Confidentiality) கேள்விக்கு உள்ளாகிறது. அப்படியான தேவையுடையோருக்கு நம்பிக்கையளிக்கும் தீர்வாக உருவெடுத்துள்ளது PrivateGPT என்னும் பொது வள (Open-Source) செய்யறிவு மென்பொருள்.
இணையமின்றி இயங்கும் வசதி (100% Data Privacy & Security)
PrivateGPT-ஐ பயன்படுத்த எந்தவொரு இணைய இணைப்பும் தேவையில்லை. நாம் இதில் பதிவேற்றும் பிடிஎஃப் (PDF), வேர்டு (Docx), எக்செல் அட்டவணைகள் (Excel), ஆவணங்கள் (Files) என அனைத்தும் வெளிப்புறச் சேவையகங்களுக்குச் (External Servers) செல்லாது. அனைத்துத் தரவுகளும் பயனரின் சொந்தக் கணினியின் நினைவகத்திலேயே (Local Storage) மிகப் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுச் செயலாக்கப்படுகின்றன.
RAG தொழில்நுட்பமும் ஆவணப் பகுப்பாய்வும் (Document Q&A with RAG)
இதிலுள்ள ‘Retrieval-Augmented Generation’ (RAG) நுட்பம், ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெரிய புத்தகங்களையும் சிக்கலான ஆவணங்களையும் படித்து, அவற்றிலுள்ள முக்கியமான தகவல்களை நொடிகளில் கண்டறிந்து தருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு, ஆவணத்தின் எந்தப் பகுதியில் அல்லது பக்கத்தில் விடை உள்ளது என்பதற்கான ஆதார மேற்கோள்களுடனும் (Citations) இது தெளிவாகப் பதில் அளிக்கிறது.
நெகிழ்வான மொழி மாதிரிகள் (Custom LLM)
பயனர்கள் தங்களின் கணினி வசதிக்கேற்ப Llama, Mistral, Gemma போன்ற எந்தவொரு பொது வள மொழி மாதிரியையும் (Open-Source LLMs) இதில் எளிதாக இணைத்துப் பயன்படுத்தலாம். மேலும், GPU Acceleration-ஐ பயன்படுத்தி, மிக வேகமாகப் பதில்களைப் பெறவும் இதில் வசதியுள்ளது.
எளிய நிறுவல் முறையும், API வசதிகளும் (Easy Setup & Enterprise API)
ஓரளவு தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள்கூட, எளிமையான கட்டளைகள் (Commands) மூலம் இதைத் தங்கள் கணினியில் நிறுவி உடனடியாகப் பயன்படுத்தத் தொடங்கலாம். மேலும், மென்பொருள் உருவாக்குநர்கள் தங்களுடைய செயலிகளுடன் இதை இணைத்துப் பயன்படுத்தும் வகையில் அமைந்த REST API வசதிகளையும் இது வழங்குகிறது.
பராமரிப்புச் செலவே இல்லை (Zero Subscription Cost)
பொதுவாகச் சக்திவாய்ந்த செய்யறிவுச் சேவைகளைப் பயன்படுத்த மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் PrivateGPT ஒரு பொது வள மென்பொருள் என்பதால், இதைத் தங்களின் சொந்தக் கணினியில் நிறுவி வாழ்நாள் முழுவதும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பிற செய்யறிவுக் கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
இணைய இணைப்பு கட்டாயம் தேவைப்படும் ChatGPT, Claude, Gemini உள்ளிட்ட தளங்களில் கொடுக்கப்படும் தரவுகள் அவற்றின் கிளவுட் சேவையகங்களுக்குச் செல்கின்றன. ஆகவே, தரவுகளின் பாதுகாப்பு குறித்த பல்வேறு சந்தேகங்கள் பயனர்களுக்கு எழுகின்றன.
ஆனால், PrivateGPT-க்கு இணைய இணைப்பு தேவையில்லை என்பதால் தரவுகள் பயனரின் கணினியை விட்டு வெளியேறுவதில்லை.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், நிதி நிறுவனப் பகுப்பாய்வாளர்கள், அரசு ஆராய்ச்சி அமைப்புகள், நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் (CEOs), ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் பேராசிரியர்கள். தரவுப் பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளாமல், நமது கணினியிலேயே செய்யறிவின் முழு ஆற்றலையும் பெற்றுக்கொள்ள PrivateGPT வகைசெய்கிறது.
PrivateGPT-ஐ தரவிறக்க: https://github.com/zylon-ai/private-gpt
செய்யறிவு விதி: ஒரே கட்டளையில் அனைத்துச் சிக்கல்களுக்கும் விடை கேட்காதீர்கள். பெரிய வேலையைச் சிறிய, எளிய படிகளாகப் பிரித்துக் கேளுங்கள். இப்படிச் செய்வதால் செய்யறிவு தரும் விடை மிகவும் துல்லியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.