தொழில்நுட்பம்

விண்வெளி நாயகன் கலாம்!

அக்.15 - அப்துல் கலாம் பிறந்தநாள்

உதயசங்கரன் பாடகலிங்கம்

ஜூலை 18, 1980. ‘இன்றைய நாளின் நாயகன் அப்துல் கலாம்’ என்று இந்திய நாடே கொண்டாடிய நாள். அன்றுதான், இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டு, விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளான ‘ரோகிணி-ஆர்எஸ்1’ வெற்றிகரமாகப் புவி கீழ்மட்டப் பாதையில் (low earth orbit) நிலைநிறுத்தப்பட்டது.

1975இல் ரஷ்யாவின் காஸ்மோஸ்-3எம் ஏவூர்தி மூலம் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ‘ஆர்யபட்டா’ விண்ணில் செலுத்தப்பட்டாலும், இஸ்ரோ தற்சார்புடன் முழுமையாக, முதன்முறையாக உருவாக்கியதாக ‘ரோகிணி’யைத்தான் குறிப்பிட முடியும்.

இந்தத் திட்டத்தின் இயக்குநராகச் செயல்பட்டவர் அப்துல் கலாம். 1979 ஆகஸ்ட் 10இல் எஸ்எல்வி ஏவூர்தி மூலமாக ரோகிணி ஏவப்பட்டது தோல்வியில் முடிந்தது; ஓராண்டு முடிவதற்குள், விடாமுயற்சியுடன் ‘ரோகிணி ஆர்எஸ்-1’ விண்ணில் பாய்ந்தது.

இடைப்பட்ட பணி நாள்களில், ஒருநாள்கூட கலாம் சோர்வுறவில்லை; குழுவில் இருந்தவர்களையும் அவ்வாறு உணரவிடவில்லை. இவ்வளவுக்கும் ஏவுதல் ஒத்திகையன்று கண்காணிப்பு அமைப்பில் கோளாறு, விண்ணில் செலுத்தப்பட்ட நாளில் நிலவிய வானிலை மாற்றங்கள் எனப் பல தடைகள்.

அனைத்தையும் கடந்து, இந்திய விண்வெளி வரலாற்றில் ‘நாயகன்’ ஆக உருவெடுத்தார் கலாம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவியலாளர் சதீஷ் தவான் கூறினார். அந்தக் கணத்தில், தனக்கே உரிய கூச்ச சுபாவத்தோடு தானும் குழுவினரும் பணியாற்றியது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார் கலாம். ‘

அன்றைய நாள், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத அளவுக்குக்களைப்போடு அனைவரும் வீடு திரும்பினர். ஆனால், அதன்பின்னர் அடுத்த வெற்றியை நோக்கிப் பயணிக்கும்வரை கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. காரணம், அதுவரை செயற்கைக்கோள் ஏவூர்தித் திறன் கொண்ட ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா வரிசையில் இந்தியா இணைந்ததே.

அதற்குப் பிறகு பிஎஸ்எல்வி உருவாக்கம் தொடங்கி, இஸ்ரோவின் பல சாதனைகளில் கலாமின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. அதேநேரத்தில், அவற்றுக்கு அடித்தளமிடுகிற வகையில் உலக நாடுகளை ஒருசேரத் திரும்பிப் பார்க்கவைத்த அந்த நாள் கலாமுக்கு மட்டுமேயானது!

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT