உலக நாடுகளைவிட குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் நாடு இந்தியா என்ற கருத்து உள்ளது.
இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் போலிடெக்னிகோ டி டோரினோ அமைப்பின் பொருளியல் வல்லுநர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை, தாழ் புவி வட்டப்பாதைக்கு அனுப்ப இந்தியாவுக்கு 13,302 அமெரிக்க டாலர் செலவாகிறது.
இது உலகின் முக்கிய விண்வெளி அமைப்புகளின் செலவுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம்.
அமெரிக்காவில் இதற்கான செலவு 3,225 டாலர். ஜப்பானில் 5,287, சீனாவில் 5,809, ரஷ்யாவில் 6,682, ஐரோப்பாவில் 9,897 டாலராகஉள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் கூறுகையில், “தவறான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் உள்ளதால் அது நிராகரிப்பட வேண்டியது” என்றார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத் கூறுகையில், “ஒரு கிலோ செலவை மட்டும் அடிப்படையாக வைத்து விண்வெளி ஏவுதலின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை முழுமையாக மதிப்பிட முடியாது” என்றார்.