ஓபன் ஏஐ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் பேசியதாவது: இந்தியாவில் மட்டும் வாரந்தோறும் சுமார் 10 கோடி பேர் சாட் ஜிபிடி தளத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் மாணவர்கள் என்பதுதான் தனிச் சிறப்பு.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் கோடிங் தளமான ‘கோடெக்ஸ்’ பயன்பாட்டில் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா திகழ்கிறது. கடந்த ஓராண்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
பள்ளி அளவிலான கணிதப் பாடங்களுக்கே திணறிய ஏஐ தொழில்நுட்பம், இன்று ஆராய்ச்சி அளவிலான கணிதத் தீர்வுகளை வழங்குவதுடன், இயற்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது வியப்பளிக்கிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஏஐ தொழில்நுட்பத்தை வெறும் பயன்பாட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல், அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும், தலைமை தாங்கும் இடத்திலும் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் உண்மையான ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ எனும் அதீத நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தொடக்க நிலையை எட்டிவிடுவோம்.
ஆனால், இந்தத் தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நாட்டின் கைகளில் முடங்கிவிடக் கூடாது. இது ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சுதந்திரம், சமத்துவம், மனித குல வளர்ச்சி உறுதி செய்யப்படும். ஏஐ தொழில்நுட்பம் காரணமாக மருத்துவம், கல்வி போன்ற சேவைகளின் செலவு குறையும்.
அதே வேளையில், தற்போதைய சில வேலைவாய்ப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம். தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எப்போதும் பழைய வேலைகளை மாற்றியமைக்கும். அதேநேரம், மனிதர்கள் எப்போதும் புதிய மற்றும் சிறந்த வேலைகளைக் கண்டறிவார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு சாம் ஆல்ட்மேன் பேசினார்.