

புதுடெல்லி: மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்த தமிழக அரசின் ரிட் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலவசத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடும். இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அறிஞர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் டி.ஹரிஷ்குமார் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மின்சாரம் பொதுப் பட்டியலில் இருக்கிறது. மின்நுகர்வு மீதான வரி, மின்விற்பனை மீதான வரி விதிக்கும்அதிகாரம் ஆகியவை மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு புதிய மின்சாரத் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையின்கீழ் 246-வது பிரிவு வழங்கியுள்ள மாநிலங்கள் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் மீறுவதாக இந்த திருத்தச் சட்டம் உள்ளது.
சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: புதிய மின்சாரத் திருத்த சட்டத்தில் உள்ள அம்சங்கள் மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், அரசியல் சாசனம் வகுத்துள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகவும் உள்ளன. குறிப்பாக மின்சாரத் திருத்த சட்டத்தின் 23-வது விதி சட்ட விரோதமாக உள்ளது. எனவே, புதிய மின்சாரத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது: சிலர் வசதி வாய்ப்பின்றி உள்ளனர். சிலர் கல்விக்கும், அடிப்படை வசதிகளுக்கும் செலவிட முடியாத நிலையில் உள்ளனர். இது உண்மைதான். இதுபோன்ற நபர்களுக்கு கல்வி, அடிப்படைவசதிகளை வழங்குவது அரசின்கடமை.
வசதி படைத்தோருக்கு இலவசம் ஏன்? - ஆனால், இலவசங்களை பெரும்பாலும் வசதி படைத்தவர்கள்தான் அனுபவித்து வருகின்றனர். பெரிய அளவிலான நில உடமையாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆடம்பர விளக்குகளையும், இயந்திரங்களையும் இலவச மின்சாரத்தில் அவர்கள் தொடர்ந்து இயக்குகின்றனர். மின்சார வசதி வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாமே. யாருடைய வரிப் பணத்தைக் கொண்டு இலவச மின்சாரம் வழங்குவது?
இது தமிழகத்துக்கு மட்டுமின்றி, நாடு முழுமைக்கும் பொருந்தும். அனைத்து மாநிலங்களிலும் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாம் எதுமாதிரியான கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறோம்? மின் கட்டணத்தை செலுத்த முடிந்தவர்களையும், செலுத்த முடியாதவர்களையும் வேறுபடுத்திப் பார்க்காமல், ஏன் ஒரேமாதிரியான சலுகைகள், இலவசங்களை வழங்குகிறோம்? மாநில அரசிடம் நிதி இல்லாவிட்டாலும், இலவச திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. வசூலிக்கப்படும் 25 சதவீத வரி வருவாயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஏன் செலவிடக் கூடாது?
வருவாய் மிகுதியான மாநிலமாக இருந்தாலும், ஒட்டுமொத்த மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களான சாலை மேம்பாடு, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மேம்பாடு போன்றவற்றை செயல்படுத்தும் கடமை அரசுக்கு இல்லையா? இதற்கு பதிலாக தேர்தலின்போது உணவு, உடை போன்றவற்றை கொடுக்கின்றனர். அவற்றை மக்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கின்றனர்.
இலவசத் திட்டங்கள் அறிவிப்பு- நாட்டில் என்ன நடக்கிறது? தேர்தல்நடைபெற்ற மாநிலங்கள், நடைபெறப் போகும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிவோம். தேர்தல் நெருங்கும்போது மட்டும் திடீர் திட்ட அறிவிப்புகள் ஏன் வெளியிடப்படுகின்றன? தேர்தலுக்கு முன்பு பல்வேறு இலவசத் திட்டங்கள் ஏன் அறிவிக்கப்படுகின்றன? இதுபோன்ற இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அறிஞர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இலவசத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடுப்பதாகிவிடும். எல்லாவற்றுக்கும் நிலைப்பாடு தேவை. எவ்வளவு காலம்தான் இலவசங்கள் தொடர்வது? காலை இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் என எல்லாவற்றையும் இலவசமாகவே வழங்கினால் மக்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்?
தேவையான எல்லாம் இலவசமாகவே கிடைக்கும் போது, உழைப்பதற்கும், வேலை செய்வதற்கும் எப்படி கற்றுக் கொள்வார்கள்? இதுபோன்ற தேசத்தைத்தான் நாம் கட்டி எழுப்புகிறோமா? இவ்வாறு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், தமிழக அரசின் ரிட் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.