இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் ஜிஎல்சி சொகுசு காரை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிமுகம் செய்தார். உடன், துணை முதல்வர் சுனேத்ரா பவார், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சந்தோஷ் ஐயர், குழுமத்தின் மூத்த நிர்வாகிகள்.
பிரபல சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், இந்தியாவில் தனது புதிய ‘எலெக்ட்ரிக் ஜிஎல்சி’ (Mercedes-Benz Electric GLC) சொகுசு எஸ்யுவி காரை அறிமுகம் செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சாக்கன் (Chakan) ஆலை வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த காரை அறிமுகம் செய்து அதில் பயணித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் அதிகபட்சமாக மெர்சிடிஸ் பென்ஸ், இந்தியாவில் இதுவரை ரூ.3,200 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 19,200 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்த ஆலை ஆண்டுக்கு 40 ஆயிரம் மின் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது.
பிரதமர் மோடியின் தலைமையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலமாக உலகின் சிறந்த தொழில்நுட்பங்கள் இந்தியாவில் தயாராகின்றன. ‘2030-க்குள் 30 சதவீத மின் வாகனப் பதிவுகள்’ என்பதை மகாராஷ்டிர மின் வாகன கொள்கை இலக்காகக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஐயர் பேசியதாவது: இந்தியாவில் எங்கள் பயணத்தை தொடங்கியபோது, முதல் 50 ஆயிரம் கார்களை விற்க 20 ஆண்டுகள்(1993-2013) ஆனது. கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 1.90 லட்சம் கார்களை விற்றுள்ளோம். இந்தியாவுடன் இணைந்து மெர்சிடிஸ் பென்ஸும் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த கார் அறிமுகத்துக்கு முன்பே 1,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. இதன் விலை ரூ.78.50 லட்சம். இதில் 94 கே.டபிள்யு.எச் திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி உள்ளது. இதன் 800 வீ அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் 10 நிமிட சார்ஜில் 300 கி.மீ தூரம் பயணிக்கும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 711 கி.மீ. தூரம் பயணிக்கும். 4.3 விநாடிகளில், மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய கடற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து காரின் பிளாஸ்டிக் பாகங்களும், குடிநீர், குளிர்பான பாட்டில்களை மறுசுழற்சி செய்து கார் இருக்கைகளுக்கான உறையும் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர துணை முதல்வர் சுனேத்ரா பவார், மெர்சிடிஸ் பென்ஸ் குழும கண்காணிப்பு வாரிய தலைவர் மார்ட்டின் பிரிடம்யூலர், மேலாண்மை வாரிய தலைவர் ஓலா கல்லீனியஸ், தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஜோர்க் பர்ஜர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- புனேவிலிருந்து ச.கார்த்திகேயன்