கோப்புப் படம்
வாரணாசி: டெல்லி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ட்ரோன்களை வாரணாசி காவல்துறை பயன்படுத்தியது பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பில் சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சேர்ந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துகின்றன. அதன்படி 4-ம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் வாரணாசியில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு காரணமாக, இந்தியாவிலேயே முதல்முறையாக வாரணாசியில் இந்த முறை புதிய வகை ட்ரோன்கள் கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து வாரணாசி காவல் இணை ஆணையரும், தமிழருமான சரவணன் தங்கமணி கூறியது: வாரணாசியில் கடந்த ஆண்டைவிட இந்த முறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய 10 பேர் கொண்ட பிரத்யேக ட்ரோன் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மினி (Mini), மைக்ரோ (Micro) மற்றும் நானோ (Nano) என 3 அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அடுத்த தலைமுறை (Next-Gen) ட்ரோன்களை பயன்படுத்தி, வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.
இதில் மினி ட்ரோன் தனித்துவமானது. பேட்டரியை மாற்ற வேண்டிய அவசியமில்லை. சூரிய ஒளியில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் வசதி கொண்டது. இதனால் மற்ற ட்ரோன்களை போல் இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட முடிகிறது. மைக்ரோ ட்ரோன் சுமார் 2 கி.மீ சுற்றளவு கொண்ட பரந்த பகுதியை கண்காணிக்கும் திறன் கொண்டது.
குறிப்பாக, ‘நமோ’ படித்துறைக்கு (Namo Ghat) பின்புறம் உள்ள காட்டுப் பகுதியை கண்காணிக்க இது பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தொலைதூரப் பகுதிகளையும் துல்லியமாக கண்காணிக்க முடிகிறது.
அதேபோல், நானோ ட்ரோன் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை கண்டறிய உதவும். உதாரணமாக, ஒரு வாகனம் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்றிருந்தால், இந்த ட்ரோன் அதை ஸ்கேன் செய்து உடனே போலீஸாருக்கு தகவல் அனுப்பும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட பணிகள் முன்னெடுக்கப்படும். இந்த 3 ட்ரோன்களில் இருந்தும் கிடைக்கும் கண்காணிப்பு தரவுகள் உடனே உயர் அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், ட்ரோன்களின் பயன்பாடு எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.