கலிபோர்னியா: ஓபன் ஏஐ நிறுவனம் ChatGPT-ல் குரூப் சாட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை இந்தியாவில் உள்ள பயனர்களும் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒரே சாட்டில் பயனர்கள் குழுவாக இணைந்து சாட் செய்யலாம்.
ChatGPT உலக அளவில் இப்போது மிக முக்கிய தொழில்நுட்ப துணையாக பெரும்பாலானவர்களுக்கு அமைந்துள்ளது. சின்ன சின்ன சந்தேகங்கள் முதல் புரியாத புதிர்களுக்கு கூட இதில் விடை கிடைக்கும். இதுவரை பயனர்கள் தனிநபராக இதில் சாட் செய்து வந்த நிலையில், குழுவாக இணைந்து சாட் செய்யலாம். இதை கட்டணம் செலுத்தாத சந்தாதாரர்களும் பயன்படுத்தலாம் என்பது ஹைலைட். இருந்தாலும் அவர்களுக்கு சாட்பாட்டின் ரெஸ்பான்ஸ் குறிப்பிட்ட வரையறைக்குள் லிமிடெடாக இருக்கும்.
ChatGPT-ல் குரூப் சாட் செய்வது எப்படி? - பயனர்கள் ChatGPT சாட்பாட்-ல் குரூப் சாட் அம்சத்தை பயன்படுத்த லாக்-இன் செய்திருக்க வேண்டும். அதன் பின்னர் சாட்பாட்டின் முகப்பு பக்கத்தில் மேல்புறம் உள்ள குரூப் சாட் ஐகானை கிளிக் செய்தவுடன் அதற்கான லிங்க் வருகிறது. அதை பயனர்கள் பிறருக்கு அனுப்பி அதன் மூலம் குரூப் சாட்டில் இணையுமாறு அழைப்பு கொடுக்கலாம்.
அதிகபட்சம் 20 பேர் வரை ஒரே நேரத்தில் குரூப் சாட்டில் இணையலாம். இதில் குழு பயனர்களின் விவாதங்களோடு ChatGPT-யும் பதில் தரும். சமயங்களில் குழு நபர்களின் ரெஸ்பான்ஸ்களுக்கு ரியாக்ட் செய்யும். பள்ளி, கல்லூரி, அலுவல் ப்ராஜெக்ட் தொடங்கி நண்பர்கள் பயணம் செல்வது தொடர்பாக திட்டமிடுவது வரை ChatGPT அளிக்கும் தகவல்களோடு குழுவாக இணைந்து அறியலாம். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் சாட்கள் தனியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாட்ஜிபிடி? - தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட் தான் சாட்ஜிபிடி. இதனை ஓப்பன் ஏஐ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர். இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.
கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது. கதையைச் சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும். இதன் மூலம் படங்களையும் ஜெனரேட் செய்யலாம்.