ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து அந்த நிறுவனம் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. பணி நீக்கம், வெறுப்பு கருத்துகளை ஊக்குவித்தல், பாதுகாப்பு குறைபாடு என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய எக்ஸ் நிறுவனம் தற்போது சிக்கியிருப்பது அதன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான க்ரோக் மூலம்.
எலான் மஸ்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட க்ரோக் ஏஐ, தற்போது உலகளவில் பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. கடந்த சில தினங்களாக க்ரோக் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி பலரும் ஆபாசமாக மாற்றி வருகின்றனர்.
தங்கள் புகைப்படங்களை பதிவிடும் பெண்களின் கமென்ட்டில் யாரேனும் ஒருவர் சென்று க்ரோக்-ஐ டேக் செய்து அந்த புகைப்படத்தை ஆபாசமாக மாற்றித் தரும்படி கேட்டால், உடனடியாக எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அதனை அப்படியே செய்துவிடுகிறது க்ரோக். இது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்கள் தொடங்கி சாதாரண பயனர்கள் வரை க்ரோக் ஏஐ தொழில்நுட்பத்தால் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற மற்ற ஏஐ கருவிகளில் இத்தகைய படங்கள் தனிப்பட்ட முறையில் மட்டுமே இருக்கும். ஆனால், எக்ஸ் தளத்தை பொறுத்தவரை க்ரோக் மூலம் உருவாக்கப்படும் இந்தப் படங்கள் பொதுவில் தெரிவதால், அவை பலருக்கும் பகிரப்பட்டுப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மற்ற ஏஐ கருவிகள் அதிகப்படியான தணிக்கை மனநிலையுடன் செயல்படுவதாக எலான் மாஸ்க் விமர்சித்திருந்தார். இதனால், க்ரோக்-ஐ எந்தவித தணிக்கையும் இல்லாத, உண்மையை அப்படியே பேசும் ஒரு கருவியாக அவர் உருவாக்க விரும்பினார். ஆனால், இந்த கட்டுப்பாடற்ற சுதந்திரம் தற்போது தவறான நபர்களுக்குக் கிடைத்த ஆயுதமாக மாறியுள்ளது. ஆபாசப் படங்களை உருவாக்க முற்படும்போது, க்ரோக் போதிய எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்படியே இணங்குவது அதன் அடிப்படை வடிவமைப்பிலேயே உள்ள கோளாறாகப் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி பலரும் தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் புகைப்படங்களை க்ரோக் உதவியுடன் மிக மோசமாக மார்ஃபிங் செய்கின்றனர். ஏஐ என்பது நாம் கொடுக்கும் கட்டளைகளை வைத்தே செயல்படக் கூடிய ஒன்று. மற்ற ஏஐ நிறுவனங்கள் இது போன்ற தவறான கட்டளைகளை கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. ஆனால், க்ரோக் ஏஐ-ல் இத்தகைய கட்டுப்பாடுகள் மிகக் குறைவாகவே உள்ளன. குறிப்பாக 2026-ல் வந்துள்ள க்ரோக்-ன் புதிய அப்டேட்கள், பயனர்கள் கொடுக்கும் சாதாரணப் படங்களைக் கூட மிக எளிதாக உருமாற்ற அனுமதிப்பது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தார். பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில் க்ரோக் ஏஐ செயல்படுவதாகவும், இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் க்ரோக் ஏஐ-யினை தவறான நோக்கத்தில் பயன்படுத்தி, அதன் மூலம் உருவாக்கப்பட்ட பெண்களின் ஆபாச படங்கள், கண்ணியமற்ற மற்றும் பாலியல் ரீதியான படங்கள், வீடியோ பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என எக்ஸ் தளத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு 72 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றுவதை எக்ஸ் தளம் உறுதி செய்ய வேண்டுமெனவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இனி இதுபோன்ற ஆபாச மற்றும் சட்ட விரோத கன்டென்ட்களை க்ரோக் ஏஐ மூலம் ஜெனரேட் செய்வதை தடுக்கும் வகையிலான கட்டமைப்புகளை உறுதி செய்ய வேண்டுமெனவும், அதற்கு தகுந்த கொள்கைகளை வகுக்கவும், அதை மீறும் பயனர்களின் கணக்கை முழுமையாக முடக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேகொள்வது அவசியம் எனவும் மத்திய அரசு, எக்ஸ் தளத்திடம் தெரிவித்துள்ளது.
இதிலிருந்து தவறும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்படும் சட்ட ரீதியான நடவடிக்கையை எக்ஸ் தளம் எதிர்கொள்ள கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
க்ரோக் ஏஐ-க்கான கட்டுப்பாடுகள் தளர்த்தி வைக்கப்பட்டிருப்பது, தவறான நபர்களுக்கு ஆயுதமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை, இனி வரும் காலங்களில் ஏஐ நிறுவனங்கள் தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தூண்டுகோலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.