

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகளை நமக்கான உதவி யாளராக மட்டுமல்ல, நமக்கான கூட்டாளி அல்லது பங்குதாரராகவும் பயன்படுத்தலாம். அதாவது, ஏஐ சேவை களுடன் இணைந்து செயல்படலாம்.
ஆனால், ஏஐ சேவைகளைப் பயன்படுத்தும் போது நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியக் கேள்வி ஒன்று இருக்கிறது. அது, ‘ஏஐ சேவைகளுடன் இணைந்து சிந்திக்கிறோமா அல்லது ஏஐ நமக்காகச் சிந்திப்பதை ஏற்றுக்கொள்கிறோமா என்பதுதான்.
அப்படியே ஏற்கலாமா? - ஏஐ அளிக்கும் பதில்களையும் பலன்களையும் கேள்விக் குள்ளாக்காமல் ஏற்றுக்கொள்ளும் போக்கே இந்தக் கேள்வியைக் கேட்க வைக்கிறது. பெரும்பாலானோர் சிந்திக்கும் திறனை ஏஐ சேவைகளிடம் அடகு வைத்துவிட்டு, அதை உணராமலும் இருக்கின்றனர் என்கிற கவலையையும் இந்தப் போக்கு உண்டாக்குகிறது. எனவே, ஏஐ சேவைகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பது முக்கியம்.
அதேபோல ஏஐ சேவைகளை எதற்காக, எப்போது, எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். இத்தகைய தேர்வும் தெளிவும் இருக்கும்போதுதான் ஏஐ சேவைகள் அளிக்கும் வெளிப்பாட்டைச் சீர்தூக்கிப் பார்க்க முடியும். இல்லையெனில் ஏஐ அளிப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதில் இருக்கக்கூடிய பிழைகளையும் பாதகமான அம்சங்களையும்கூட அறியாமல் இருப்போம்.
எனவேதான் ஏஐ சேவையின் மூலம் சிறந்த பயன்பெறுவது என்பது அவற்றைப் பயன்படுத்தும் மனிதர்களின் கைகளில் இருக்கிறது என்கிறார் ராஸ் ஸ்டீவன்சன் என்கிற கற்றல் பயிற்சியாளர். இருபது ஆண்டுகளுக்கும் மேல் கற்பித்தலில் அனுபவம் கொண்ட ஸ்டீவன்சன், நவீன ஏஐ கருவிகளைப் பயன்படுத்த வழிகாட்டும் வகையில் ’ஸ்டீல்தீஸ்தாட்ஸ்’ (stealthesethoughts) என்கிற இணையதளம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.