தொழில்நுட்பம்

சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி

செய்திப்பிரிவு

சென்னை: மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட 44 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச வைஃபை வசதி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சிக்கும், மக்களுக்கு எளிதாக அந்த சேவைகளை கொண்டு சேர்ப்பதற்கும் தமிழக அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகள், விளையாட்டுத் திடல்கள், பூங்காக்களில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டை மேற்கொள்ளும் விதமாக உயர்தரத்தில் இலவச வைஃபை வசதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி முதல்கட்டமாக மாநகராட்சிக்கு உட்பட்ட மெரினா கடற்கரை பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 5 இடங்களிலும், தலைமைச் செயலக பூங்காவில் 12 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களில் நேற்று முதல் இலவச வைஃபை வசதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சேவையை பயன்படுத்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வைஃபையை ஆன் செய்து, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள க்யூ-ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் மூலம் வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்து வைஃபை வசதியை பெற்றுக்கொள்ளலாம். மக்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்பாட்டில் இல்லாத வைஃபை வசதியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் மற்றும் புதிதாக வைஃபை வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT