தொழில்நுட்பம்

போலியான பிம்பம் முதல் தகவல் திருட்டு வரை - சமூக ஊடகத்தில் ‘பொய்கள்’ ஜாக்கிரதை!

ஜூன் 30 - சமூக ஊடக நாள்

ப்ரதிமா

சமூக ஊடகங்களில் உண்மைக்கும் போலிக்குமான எல்லைக் கோடுகள் அழியத் தொடங்கி, பொய்களே உண்மையை விஞ்சி நிற்பதுதான் தற்காலத்தின் சவால்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியால் தவறான தகவல்களை உண்மைபோல் சித்தரித்து மக்கள் மத்தியில் அவற்றைப் பரப்பும் ஆபத்தான போக்கும் நிகழ்கிறது. இது அரசியல் பரப்புரைகள் தொடங்கி சதிக்கோட்பாடுகள் (தடுப்பூசிக்கு எதிரான மனநிலை போன்ற) வரை நீள்கிறது.

போலியான பிம்பம்

‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பத்தின் உதவியோடு அசலை மிஞ்சுகிற வகையில் சித்தரிக்கப்படும் போலியான காணொளிகள் / ஒளிப்படங்கள் சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பப்படுகின்றன. பிரபலங்களின் குரலைப் போலவே அச்சு அசலாக நகலெடுத்து, காணொளியாகவோ ஒலிப்பதிவாகவோ வெளியிடுவதும் நடைபெறுகிறது.

மக்கள் மனங்களில் சம்பந்தப்பட்ட ஆளுமை குறித்த நல்ல பிம்பத்தைச் சிதைப்பதுதான் இதுபோன்ற ‘டீப்ஃபேக்’ காணொளிகளின் முதன்மை நோக்கம். இதற்கு எதிர்மறையாக, சிலரைப் பற்றிய உயர்வான பிம்பமும் இதன் மூலம் கட்டமைக்கப்படுகின்றன. சாதாரண மக்களால் எது உண்மை, எது போலி என இனங்காணவே முடியாததுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் ஆபத்து.

தகவல் திருட்டு

பெரும்பாலான செயலிகள் நமக்கெனப் ‘பிரத்யேகமாக’ச் சிலவற்றை வடிவ மைப்பதாகக் கூறிக்கொண்டு நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைக் கோருவது இயல்பாகிவிட்டது.

அவர்களின் உள்நோக்கத்தை உணராமல் நம்மைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தையும் அவர்களுக்கு அளித்து விடுகிறோம். இது ஒளிப்படத் திருட்டு, பணமோசடி எனப் பல ஏமாற்று வேலைகளுக்கு நம்மை இலக்காக்கி விடுகிறது.

வெறுப்புணர்வு

குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு எதிராகவோ பெண்களுக்கு எதிராகவோ சமூக ஊடகங்கள் மூலம் மிக எளிதாக வெறுப்புணர்வைக் கட்டமைப்பதும் நடைபெறுகிறது. சமூக ஊடகங்களில் முடிவே இல்லாமல் மூழ்கிக் கிடப்பதன் மூலம் மக்களிடையே பதற்றம், பயம், மனச்சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, எதிலும் நிறைவின்மை போன்றவை ஏற்படுகின்றன. உளவியல்ரீதியான பெரும் பாதிப்புகளுக்கும் சிலர் ஆளாகிறார்கள்.

கவனம் தேவை

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது என்பது இரண்டு முனைகளும் கூரான கத்தி போன்றது. எனவே, அவற்றில் பரப்பப்படும் செய்திகள்/காணொளிகள்/ஒளிப்படங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறியாமல் அவற்றை நம்புவதும் பரப்புவதும் தவறு.

எக்காரணம் கொண்டும் நம் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி எண்கள் ஆகியவற்றைச் சமூக ஊடகக் கணக்குகளிலோ செயலிகளிலோ பதிவிடக் கூடாது.

போலியான அரசியல் தகவல்கள், சதிக்கோட்பாடுகள், வெறுப்புணர்வு பிரச்சாரங்கள், தனிப்பட்ட தகவல்களை வைத்து நிகழ்த்தப்படும் மோசடிகள் போன்றவற்றைக் கட்டுப் படுத்துவது அரசாங்கத்தின் கடமை.

SCROLL FOR NEXT