தொழில்நுட்பம்

சமூக ஊடகப் பாதுகாப்பில் கோட்டை விடலாமா?

ஜூன் 30 - சமூக ஊடக நாள்

ம.சுசித்ரா

சமூக ஊடகப் பயன்பாட்டில் உலக அளவில் இரண்டாம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ஆனாலும் சமூக ஊடகப் பாதுகாப்பில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்றளவும் இந்தியா பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

போதுமான விழிப்புணர்வு இன்மை, பயன்பாட்டு வேகம் போன்ற காரணிகளால் சமூக ஊடகப் பாதுகாப்பை எப்படி எல்லாம் தவறவிடுகிறோம் என்பதையும் பாதுகாப்புக்கான வழிகளையும் அறிவோம்.

எங்கே தவறவிடுகிறோம்?

செல்லும் இடம் எல்லாம் ‘எங்கே இருக்கிறோம் என்கிற ‘லைவ் லொகே ஷன்’ஐ இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இன்று சகஜ மாகிவிட்டது. குடும்ப ஒளிப் படங்கள், குழந்தைகளின் பள்ளி விவரங்களையும் இதே போன்று பலர் பகிர்ந்துகொள்கின்றனர். இது ஆள்கடத்தல், அடையாளத் திருட்டுக்கு வழிவகுக்கும்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் காணும் தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராயாமல், அவற்றை ஃபார்வேர்டு செய்யும் வழக்கத்தால் போலிச் செய்திகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.

சமூக ஊடகங்களில் கணக்கைத் தொடங்கும்போது ‘டீஃபால்ட் செட்டிங்ஸ்’ஐ மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதால் அதில் பதியப் படும் தனிப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் எளிதில் கசிந்துவிடுகின்றன.

பாதுகாப்புக்கான வழிகள்

முதலாவதாக, சமூக ஊடகங்களில் உங்கள் பெயர், பிறந்த தேதி போன்ற எளிதில் கணிக்கக்கூடிய விவரங்களை பாஸ்வேர்டாக வைக்கக் கூடாது. எழுத்துகள், எண்கள், குறியீடுகள் கலந்த கலவை நல்லது.

அடுத்து, ‘2 Factor Authentication’ என்பதை ஆன் செய்யுங்கள். யாராவது உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறிந்தாலும் உங்கள் திறன்பேசிக்கு வரும் ஓடிபி இல்லாமல் கணக்கைத் திறக்க முடியாது.

அடுத்து, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் தொடர் பான தகவல்கள், ஒளிப்படங்கள், காணொளிகளைப் பகிர்ந்து கொள்ளும் முன் ‘Friends only’ஐ தெரிவுசெய்யுங்கள். முக்கியமாக, முன்பின் அறியாத நபர்களின் நட்பு அழைப்பைத் தவிர்ப்பது நல்லது.

வங்கி விவரம், ஆதார் எண், கைபேசி எண் போன்றவற்றைப் பகிர வேண்டாம். குழந்தைகளின் பள்ளிச் சீருடை, பள்ளி முகவரி அல்லது பள்ளி இருக்கும் இடம் தெரியும்படியாக ஒளிப்படம் அல்லது காணொளிகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

முதலும் கடைசியுமாக, சமூக ஊடகங்களில் ஒருமுறை பதியப்படும் தகவல் எதுவாயினும் நீங்களே நீக்கினாலும் முழுமையாக அழிவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

SCROLL FOR NEXT